இந்திய அணி தேர்வு எப்போது * உலக கோப்பை 'டி-20' தொடருக்கு...
இந்திய அணி தேர்வு எப்போது * உலக கோப்பை 'டி-20' தொடருக்கு...
ADDED : டிச 19, 2025 11:10 PM

மும்பை: இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-மார்ச் 8ல் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.
இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நடப்பு உலக சாம்பியன் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவை (பிப். 7) சந்திக்க உள்ளது.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. கேப்டனாக சூர்யகுமார், துணைக் கேப்டனாக சுப்மன் கில் தொடரலாம். கடந்த ஒரு ஆண்டாக 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் 35 வயது சூர்யகுமாருக்கு, இது கடைசி தொடராக இருக்கும்.
மாற்று துவக்க வீரராக தற்போது சாம்சன் இருப்பதால், ஜெய்ஸ்வால் இடம் பிடிப்பது சந்தேகமாக உள்ளது. மற்றபடி அபிஷேக் சர்மா, திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சேர்க்கப்படலாம்.
மாற்று வீரர்களாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா வாய்ப்பு பெறுவர்.
* தவிர, சொந்தமண்ணில் நடக்கவுள்ள, நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் இன்று, அறிவிக்கப்பட உள்ளது. உலக கோப்பை தொடருக்கான அதே அணி, இதில் களமிறங்க வாய்ப்புள்ளது.
