பைனலில் இளம் இந்தியா * யூத் ஆசிய கோப்பை தொடரில்...
பைனலில் இளம் இந்தியா * யூத் ஆசிய கோப்பை தொடரில்...
ADDED : டிச 19, 2025 11:16 PM

துபாய்: யூத் ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 12வது சீசன் நடக்கிறது. நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. துபாயில் நடந்த போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தாமதம் ஆக, தலா 20 ஓவர்களாக மாற்றப்பட்டது.
'டாஸ்' வென்ற இந்தியா பீல்டிங் செய்தது. இலங்கை அணிக்கு சமிகா (42), கேப்டன் தின்சரா (32), சேத்மிகா (30) கைகொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில் 138/8 ரன் எடுத்தது. இந்தியாவின் ஹெனில், கனிஷ்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய வெற்றி
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7), வைபவ் (9) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பின் இணைந்த ஆரோன் ஜார்ஜ், விஹான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடிக்க, இந்திய அணி 18 ஓவரில் 139/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. ஆரோன் (58), விஹான் (61) அவுட்டாகாமல் இருந்தனர்.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேச அணி (121/10), 8 விக்கெட்டில் பாகிஸ்தானிடம் (122/2) வீழ்ந்தது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
