UPDATED : ஜூன் 28, 2025 04:36 PM
ADDED : ஜூன் 27, 2025 11:11 PM

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 159 ரன்னில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180, வெஸ்ட் இண்டீஸ் 190 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 92/4 ரன் எடுத்து, 82 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஹெட் (61), வெப்ஸ்டர் (63) அரைசதம் அடித்தனர். பின் வரிசையில் அலெக்ஸ் கேரி தன் பங்கிற்கு 65 ரன் எடுத்து கைகொடுத்தார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்னில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீசின் ஷமார் ஜோசப் 5 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து 301 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. மறுபக்கம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் போட்டுத் தாக்கினார். கேம்பெல் (23), கீசி கார்டி (20), பிரண்டன் கிங் (0), கேப்டன் சேஸ் (2) என வரிசையாக 'டாப்' ஆர்டரை தகர்த்தார். கம்மின்ஸ் 'வேகத்தில்' ஹோப் (2) போல்டாக, வெஸ்ட் இண்டீஸ், 27 ஓவரில் 86/8 ரன் என திணறியது.
ஷமார் ஜோசப், 44 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. கிரீவ்ஸ் (38) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூலை 3ல் செயின்ட் ஜார்ஜில் துவங்குகிறது.