/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'சுழலில்' சாதிப்பார் குல்தீப் * சேட்டன் சர்மா நம்பிக்கை
/
'சுழலில்' சாதிப்பார் குல்தீப் * சேட்டன் சர்மா நம்பிக்கை
'சுழலில்' சாதிப்பார் குல்தீப் * சேட்டன் சர்மா நம்பிக்கை
'சுழலில்' சாதிப்பார் குல்தீப் * சேட்டன் சர்மா நம்பிக்கை
ADDED : ஜூலை 22, 2025 10:56 PM

திருப்பரங்குன்றம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பவுலரும் 'ஹாட்ரிக்' சாதனையாளருமான சேட்டன் சர்மா நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மனைவியுடன் தரிசனம் செய்தார்.
பின் அவர் கூறியதாவது:
எனது மனைவி சென்னையைச் சேர்ந்தவர். நானும் அவரும் தென்தமிழகத்திலுள்ள கோயில்களில் ஆன்மிக சுற்றுலா செல்கிறோம். கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சியான தருணம்.
தற்போது இந்தியா--இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடக்கிறது. நமது அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மான்செஸ்டர் போட்டிக்கு சிறப்பாக தயாராகியுள்ளனர். கடந்த லார்ட்ஸ் போட்டி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த டெஸ்ட் போட்டியாக இருந்தது. கடைசிவரை நமது வீரர்கள் போராடினார்கள். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கும். குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்திருக்கிறேன். வீரர்களை தேர்வு செய்வதில் எந்த அரசியலும் இல்லை. முறையான செயல் திட்டம் உள்ளது. ரஞ்சி டிராபி, திலீப் டிராபி போன்ற ஆட்டங்களின்மூலம் வீரர்களை தேர்வு செய்கிறோம். இது ஒரு சிறந்த சிஸ்டம். நானும் அதில் அங்கம் வகித்திருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது. சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் வளர்ந்து வருகிறார்கள். பும்ரா உலகின் தலைசிறந்த பவுலர். அவருடன் நமக்கு நிறைய சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனால் கவலைப்பட தேவையில்லை. நமது இளைஞர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.
இளம் வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். நன்கு விளையாடக் கூடிய வீரர்களை தான் அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் திறமையான வீரராக இருந்தால் உங்களை தவிர்க்க முடியாது.
கபில்தேவ் தான் எனக்கு வழிகாட்டி. நான் 17 வயதில் அறிமுகப் போட்டி விளையாடிய போது எனக்கு முதல் கேப்டனாக இருந்தவர் சுனில் கவாஸ்கர். அவரும் எனக்கு சிறந்த வழிகாட்டி. ஒரு நாள் போட்டியில் கேப்டன் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் என்னை நம்பி 17 வயதில் எனக்கு வாய்ப்பு அளித்தனர். அதை மறக்கவே முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.