/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி * ஒருநாள் தொடர் நாளை துவக்கம்
/
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி * ஒருநாள் தொடர் நாளை துவக்கம்
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி * ஒருநாள் தொடர் நாளை துவக்கம்
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி * ஒருநாள் தொடர் நாளை துவக்கம்
ADDED : பிப் 04, 2025 11:17 PM

நாக்பூர்: ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் முதன் முறையாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி நாளை நாக்பூரில் பகலிரவு போட்டியாக நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய 'டி-20' தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டியில் 14 விக்கெட் சாய்த்து, தொடர் நாயகன் ஆனார். அடுத்து மார்ச் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., தொடர் வரை, இவருக்கு எவ்வித போட்டிகளும் இல்லை.
இதனால் வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான 'பார்மை' தக்கவைக்கும் வகையில் பயிற்சியாளர் காம்பிர் விருப்பத்தின் படி, முதன் முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இவர், வலைப்பயிற்சியில் பந்து வீசினார்.
இதுகுறித்து இந்திய அணி துணைக் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,'' வருண் சக்ரவர்த்தி, இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது உண்மை தான்,'' என்றார்.
இந்திய அணி தரப்பில் வெளியான செய்தி:
இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு, பயிற்சியின் போது வருண் சக்ரவர்த்தி பவுலிங் செய்ய வேண்டும் என அணி நிர்வாகம் விரும்பியது. தற்போது உள்ளூர் போட்டிகளும் முடிந்து விட்டன. அடுத்து ஐ.பி.எல்., தொடரில் தான் இவர் பங்கேற்பார். இதனால், அணியில் சேர்க்கப்பட்டார்.
அணியில் ஏற்கனவே நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி அணியில் இந்தியா 3 லீக் போட்டியில் தான் பங்கேற்கும். இதனால் வருண் சக்ரவர்த்தி இடம் பெறுவது தற்போது வரை உறுதியில்லை. ஒருவேளை அணி நிர்வாகம் விரும்பினால், இதுகுறித்து தேர்வுக்குழுவிடம் பேசிய பின் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கல்தா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் பிப். 12 வரை மாற்றம் செய்யலாம். இங்கிலாந்து தொடரில் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்பட்டால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம். ஏற்கனவே ஜடேஜா, அக்சர் படேல், கடந்த 2024, அக்., க்கு பின் போட்டிகளில் பங்கேற்காத குல்தீப், வாஷிங்டன் சுந்தர் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் குல்தீப் அல்லது வாஷிங்டனுக்குப் பதில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்படலாம்.
மாற்றம் வருமா
கடந்த 2021ல் துபாயில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில், வருண் சக்ரவர்த்தி 3 போட்டியில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இதன் பின் பவுலிங்கில் பெரியளவு மாற்றம் கொண்டு வந்துள்ளார்.
இந்திய 'டி-20' அணிக்காக, 18 போட்டியில் 33 விக்கெட் சாய்த்துள்ளார். சமீபத்திய விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் தமிழக அணிக்காக 18 விக்கெட் வீழ்த்தினார். இது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தொடரலாம்.

