/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'வேட்டையன்' பும்ரா... ஜோரா இந்தியா * சேப்பாக்கத்தில் 'வேகங்கள்' மிரட்டல்
/
'வேட்டையன்' பும்ரா... ஜோரா இந்தியா * சேப்பாக்கத்தில் 'வேகங்கள்' மிரட்டல்
'வேட்டையன்' பும்ரா... ஜோரா இந்தியா * சேப்பாக்கத்தில் 'வேகங்கள்' மிரட்டல்
'வேட்டையன்' பும்ரா... ஜோரா இந்தியா * சேப்பாக்கத்தில் 'வேகங்கள்' மிரட்டல்
ADDED : செப் 20, 2024 11:02 PM

சென்னை: சென்னை டெஸ்டில் இந்திய 'வேகங்களின்' பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு சுருண்டது. பும்ரா 4 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 339 ரன் எடுத்திருந்தது. அஷ்வின் (102), ஜடேஜா (86) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. டஸ்கின் அகமது வீசிய நேற்றைய 3வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா (86) அவுட்டானார். ஆகாஷ் (17) சற்று கைகொடுக்க, அஷ்வின் 113 ரன் எடுத்து கிளம்பினார். பும்ரா (7) நிலைக்கவில்லை.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசத்தின் ஹசன் மஹ்முத் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட் சாய்த்தனர்.
பும்ரா அபாரம்
பின் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய 'வேகங்களின்' பந்துவீச்சில் சிக்கி சிதறியது. பும்ரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷாத்மன் (2) போல்டானார். சிராஜ் பந்தில் ஜாகிர் ஹசனுக்கு அவுட் கேட்கப்பட்டது. அம்பயர் மறுக்க, இந்திய தரப்பில் அப்பீல் செய்யவில்லை. 'ரீப்ளேயில்' பந்து ஸ்டம்சை தாக்குவது தெரியவர, இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆகாஷ் 'இரண்டு'
இருப்பினும் தனது 2வது ஓவரை வீசிய ஆகாஷ் தீப், முதல் இரு பந்தில் ஜாகிர் (3), மோமினுலை (0) போல்டாக்கி மிரட்டினார். சிராஜ் பந்தில் கேப்டன் நஜ்முல் (20), பும்ராவிடம் முஷ்பிகுர் (8) அவுட்டாக, வங்கதேச அணி 40/5 ரன் என திணறியது.
லிட்டன் தாஸ் (22), சாகிப் அல் ஹசன் (32) என இருவரும் ஜடேஜா சுழலில் சிக்கினர். மீண்டும் அசத்திய பும்ரா, ஹசன் (9), டஸ்கினை (11) வெளியேற்றினார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு சுருண்டது. மெஹிதி ஹசன் (27) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 4, சிராஜ் 2, ஆகாஷ் 2, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 227 ரன் முன்னிலை பெற்றது இந்தியா. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் (5), ஜெய்ஸ்வால் (10) ஏமாற்றம் தந்தனர். கோலி 17 ரன் எடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்து, 308 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுப்மன் கில் (33), ரிஷாப் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
பும்ரா '400'
ஹசனை அவுட்டாக்கிய இந்தியாவின் பும்ரா, 400வது சர்வதேச விக்கெட் வீழ்த்தினார். இவர் 37 டெஸ்ட் (163 விக்.,), 89 ஒருநாள் (149), 70 'டி-20' (89) என இதுவரை 196 போட்டியில் 401 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* கபில்தேவ் (687), ஜாகிர் கான் (597), ஸ்ரீநாத் (551), முகமது ஷமி (448), இஷாந்த்துக்கு (434) அடுத்து இந்த இலக்கை எட்டிய 6வது இந்திய வேகப்பந்து வீச்சாளர், 10 வது இந்திய பவுலர் ஆனார் பும்ரா. முதலிடத்தில் கும்ளே (956) உள்ளார்.
மைல்கல் எப்படி...
விக்., வீரர்
முதல் விக்., ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,)
100 வது டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,)
200 வது கருணாரத்னே (இலங்கை)
300 வது டிக்வெல்லா (இலங்கை)
400 வது ஹசன் (வங்கதேசம்)
ஒரே நாளில் 17 விக்.,
சென்னை டெஸ்டில் ஒரே நாளில் அதிக விக்கெட் சரிந்தது நேற்று நடந்தது. 2வது நாளில் இந்தியாவின் 7 (4+3), வங்கதேசத்தின் 10 என 17 விக்கெட்டுகள் சரிந்தன. இதற்கு முன் 1979ல் வெஸ்ட் இண்டீஸ் (3வது நாள்), 2021ல் இங்கிலாந்து (2, 4வது நாள்) டெஸ்டில் என 3 முறை ஒரே நாளில் 15 விக்கெட் வீழ்ந்தன.
சரியா கோலி
வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் சுழலில் கோலி எல்.பி.டபிள்யு., ஆனதாக அம்பயர் கெட்டில்பரோ அறிவித்தார். சுப்மனுடன் பேசிய கோலி, அப்பீல் செய்யாமல் வெளியேறினார். 'ரீப்ளேயில்' பந்து முதலில் பேட்டிங் பட்டது தெளிவாகத் தெரிய, கேப்டன் ரோகித், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தீர்ப்பு வழங்கிய அம்பயர், சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.
முதல் பவுலர்
இந்திய மண்ணில் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்த முதல் வங்கதேச பவுலர் ஆனார் ஹசன் மஹ்முத். முன்னதாக 2019, இந்துார் டெஸ்டில், அபு ஜயேத் 4 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
232 ரன்
இந்திய அணி 150 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த பின், கடைசி 4 விக்கெட் இணைந்து அதிக ரன் சேர்த்த வரிசையில், சென்னை டெஸ்ட் இரண்டாவது இடம் பிடித்தது. இங்கு 144/6 ரன்னை இழந்த இந்தியா, பின் 232 ரன் சேர்த்து, 376 ரன் எடுத்தது.
முன்னதாக 1971ல் வெஸ்ட் இண்டீசிற்கு (பிரிட்ஜ்டவுன்) எதிராக 70/6 என இருந்த இந்தியா, பின் 277 ரன் சேர்த்து 347 ரன் எடுத்தது, முதலிடத்தில் உள்ளது.
1094
முதல் 10 டெஸ்டுக்குப் பின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் (1094 ரன்) முதல்வனாக உள்ளார். கவாஸ்கர் (978) அடுத்து உள்ளார்.
* சர்வதேச அளவில் பிராட்மேன் (1446, ஆஸி.,), எவர்டன் (1125, வெ.இண்டீஸ்), ஹெட்டிங்லேவுக்கு (1102, வெ.இண்டீஸ்), அடுத்து நான்காவதாக உள்ளார் ஜெய்ஸ்வால்.