ADDED : நவ 26, 2024 11:14 PM

புதுடில்லி: குடும்ப சூழல் காரணமாக காம்பிர் அவசரமாக நாடு திரும்பினார்.
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் 43. ஐந்து டெஸ்ட் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றார். இவரது பயிற்சியில் இந்திய அணி பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் டிசம்பர் 6-10ல் நடக்கவுள்ளது.
இதற்கு முன் இன்று கான்பெரா செல்லும் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் இருநாள் கொண்ட, பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி நவ. 30-டிச. 1ல் நடக்க உள்ளது.
இதற்கு, இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியாளர் காம்பிர், குடும்ப சூழல் காரணமாக நேற்று இந்தியா திரும்பினார். அடிலெய்டு டெஸ்ட் துவங்கும் முன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைப் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், டசாட்டே, மார்கல் இணைந்து இந்திய அணி வீரர்களுக்கு உதவ காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு 'ஆல் ரவுண்டர்' ஜாக் எட்வர்ட்ஸ் தலைமை ஏற்கிறார். ஸ்காட் போலந்து, மாத்யூ ரென்ஷா உள்ளிட்டோர் களமிறங்க உள்ளனர்.
'மிடில்-ஆர்டரில்' ரோகித்
கேப்டன் ரோகித் சர்மா வரவால், அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம். தேவ்தத் படிக்கல் நீக்கப்படுவார். காயத்தில் இருந்து சுப்மன் கில் தேறினால், துருவ் ஜுரல் வாய்ப்பை இழப்பார். கடந்த டெஸ்டில் துவக்கத்தில் ராகுல் சிறப்பாக விளையாடினார். இதனால் ரோகித் 'மிடில்-ஆர்டரில்', 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்கினால் நன்றாக இருக்கும். தனது துவக்க இடத்தை ரோகித் விட்டுத் தர சம்மதிப்பாரா என தெரியவில்லை.