/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * இன்று ஜிம்பாப்வேயுடன் பலப்பரீட்சை
/
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * இன்று ஜிம்பாப்வேயுடன் பலப்பரீட்சை
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * இன்று ஜிம்பாப்வேயுடன் பலப்பரீட்சை
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * இன்று ஜிம்பாப்வேயுடன் பலப்பரீட்சை
ADDED : பிப் 25, 2026 11:01 PM

சென்னை: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இன்று இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'சூப்பர்-8' சுற்று, பிரிவு 1ல் இன்று, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் தோற்ற இந்தியா, இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். ஆனால் அணியின் 'டாப் ஆர்டர்' பேட்டிங் கவலை தருகிறது.
உலக கோப்பை தொடரின் முதல் 4 போட்டியில் அபிேஷக் 15 ரன் தான் எடுத்துள்ளார். 'ஆப் ஸ்பின்' வலையில் இருந்து இவர் மீண்டு வந்தால் நல்லது.
வருவாரா சாம்சன்
பேட்டிங் ஆர்டரில், அபிஷேக், இஷான் கிஷான் , திலக் வர்மா என முதல் 3 வீரர்களும், இடதுகை பேட்டர்களாக உள்ளனர். இதனால், 'பவர் பிளே' ஓவர்களில் எதிரணிகள் 'ஆப் ஸ்பின்' வீசி ரன்குவிப்பை எளிதாக கட்டுப்படுத்துகிறது. இதில் இஷான் (176 ரன்) நம்பிக்கை தருகிறார்.
3வது இடத்தில் சஞ்சு சாம்சனை (வலது கை) கொண்டு வரலாம் என்றால், அவரும் 'பார்ம்' இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், திலக் வர்மாவை (107) பின்தள்ளி, 3வது இடத்தில் கேப்டன் சூர்யகுமாரை (180) களமிறக்கும் திட்டம் உள்ளது. அதேநேரம், சாம்சன் இடம் பெற்றால், ரிங்கு சிங் அல்லது திலக் வர்மா என ஒருவருக்குத் தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
பின் வரிசையில் ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (105) தங்கள் பங்கிற்கு இந்தியாவுக்கு உதவலாம்.
பும்ரா ஆறுதல்
வேகப்பந்து வீச்சில் பும்ரா (7) மட்டும் நம்பிக்கை தருகிறார். அர்ஷ்தீப் சிங் (5), ஹர்திக் பாண்ட்யா (5), சுழலில் வருண் சக்ரவர்த்தி (10) இன்று, ஜிம்பாப்வே பேட்டர்களை எளிதாக வீழ்த்த வேண்டும். வாஷிங்டன் சுந்தர் இடத்தில் துணைக் கேப்டன் அக்சர் படேல் (6) களமிறங்க காத்திருக்கிறார்.
கேப்டன் பலம்
ஜிம்பாப்வே அணி லீக் சுற்றில் இலங்கை, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் மோசமாக தோற்றதால், இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் பென்னெட் (180 ரன்), மருமானி (104), கேப்டன் சிக்கந்தர் ரசா (102) நம்பிக்கை தருகின்றனர்.
வேகப்பந்துவீச்சில் முசரபானி (11 விக்.,), ஈவன்ஸ் (9), நகரவா (5) அச்சுறுத்தல் தர உள்ளனர். சுழலில் கிரீமர் (3), பர்ல் (2), சிக்கந்தர் ராசா (1) பெரியளவு தொல்லை தர மாட்டர் என நம்பலாம்.
யார் ஆதிக்கம்
உலக கோப்பை தொடருக்காக புதியதாக தயாரான சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. இன்று ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
* 'டி-20' அரங்கில் இரு அணிகள் மோதிய 13 போட்டியில் இந்தியா 10ல் வென்றது. ஜிம்பாப்வே 3ல் வெற்றி பெற்றது.
* உலக 'டி-20'ல் இரு அணிகள் மோதிய ஒரு போட்டியில் இந்தியா வென்றது (2022, 71 ரன், இடம்: மெல்போர்ன்).
முதன் முறை
கடந்த 2002 முதல் இந்தியாவில், ஜிம்பாப்வே 5 டெஸ்ட், 19 ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. முதன் முறையாக இன்று, இந்திய மண்ணில் இரு அணிகள் 'டி-20' போட்டியில் மோத உள்ளன.
தெ.ஆப்ரிக்கா-வெ.இண்டீஸ் மோதல்
இன்று மதியம் ஆமதாபாத்தில் நடக்கும் மோதலில் தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மார்ச் 1ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வேயை சந்திக்கும். இந்த இரு போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றால், இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
* அடுத்து, இந்திய அணி, ஜிம்பாப்வே (இன்று), பின் வெஸ்ட் இண்டீசை (மார்ச் 1) வென்றால் போதும். தென் ஆப்ரிக்கா (6 புள்ளி), இந்திய (4) அணிகள் அரையிறுதிக்கு செல்லலாம்.
* ஒருவேளை இன்று தென் ஆப்ரிக்கா தோற்றால் வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளி பெறும். ஏற்கனவே மோசமான ரன் ரேட்டில் உள்ள இந்தியாவுக்கு (-3.800), இம்முடிவு பெரும் நெருக்கடியாக அமையும்.
* இதனால், ஜிம்பாப்வே, பின் வெஸ்ட் இண்டீசை அதிக ரன் வித்தியாசத்தில் இந்தியா (4 புள்ளி) வீழ்த்த வேண்டும். மறுபக்கம் ஜிம்பாப்வேயை தென் ஆப்ரிக்கா (4 புள்ளி) வெல்லலாம்.
* முடிவில், இந்தியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள், தலா 4 புள்ளியுடன் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் 'டாப்-2' அணி அரையிறுதிக்கு செல்லும்.

