ADDED : செப் 11, 2026 11:27 PM

புதுடில்லி: இந்தியா-ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு துாதரக உறவை கொண்டாடும் வகையில் இரு அணிகளும் முதன் முறையாக 'டி-20' போட்டியில் மோத உள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்போட்டி, வரும் 22ல், ஜப்பானின் சனோ நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கு சுஜுகி கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் அணி கேப்டன் கடோவாகி-பிளமிங் 30, கூறியது:
ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற அணிகள் ஜப்பான் வருகின்றன. இதெல்லாம் நடக்குமா என சில ஆண்டு முன்புவரை யோசித்தோம். தற்போது, இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். இப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பவுலிங், பேட்டிங் என அனைத்து பிரிவிலும் சிறப்பான, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது இந்தியா.
இவர்களுக்கு எதிராக எங்களால் முடிந்தவரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
17 வயது வீரர் ஹிரா ஹின்ஸ் கூறுகையில்,'' பேஸ் பால் விளையாட்டின் ஆதிக்கம் நிறைந்த ஜப்பானில், இந்தியாவுக்கு எதிரான போட்டி, கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.
