தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா 200வது வெற்றி: ஜப்பான் பிடியில் இருந்து தப்பியது

இந்தியா 200வது வெற்றி: ஜப்பான் பிடியில் இருந்து தப்பியது

இந்தியா 200வது வெற்றி: ஜப்பான் பிடியில் இருந்து தப்பியது


UPDATED : செப் 22, 2026 11:24 PM

ADDED : செப் 21, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 11:24 PM ADDED : செப் 21, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சனோ: 'டி-20' போட்டியில் ஜப்பான் பிடியில் இருந்து தப்பிய இந்திய அணி, 2 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில் 200வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா, -ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில், ஒரே ஒரு 'டி-20' போட்டி, சனோ நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

5 ஓவர் போட்டி

'துஜுவான்' புயல் காரணமாக, ஜப்பானில் மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக இருந்தது. நீண்ட நேரம் தாமதம் ஏற்பட, தலா 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்திய 'லெவனில்' 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை. 'டாஸ்' வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

திணறல் 'பேட்டிங்'

இந்திய அணிக்கு துவக்கத்தில் அபிஷேக் சர்மா (0), சஞ்சு சாம்சன் (9) ஏமாற்ற, 1.2 ஓவரில் 9/2 ரன் எடுத்து தவித்தது. இஷான் கிஷானும் (3) நடையை கட்ட, 3 ஓவரில் 14/3 ரன் என நிலைமை மோசமானது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதை அறிந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 1, 2 ரன்னாக எடுத்தார். இவர் 16 ரன்னுக்கு (12 பந்து) வெளியேறினார். ஜப்பான் துல்லியமாக பந்துவீச, இந்திய அணி 2 பவுண்டரி தான் அடித்தது. ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இந்திய அணி 5 ஓவரில் 32/4 ரன் எடுத்தது. திலக் வர்மா (1), ஷிவம் துபே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

கைகொடுத்த அக்சர் படேல்

சுலப இலக்கை விரட்டிய ஜப்பான் அணி, 2 ஓவரில் 8/2 ரன் எடுத்தது. பிஷ்னோய் ஓவரில் கேப்டன் கெண்டல் கடோவாகி-பிளமிங் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 10 ரன் எடுக்கப்பட்டன. 4வது ஓவரில் 7 ரன் கொடுத்த வாஷிங்டன் சுந்தர், கடைசி பந்தில் கெண்டலை (12) அவுட்டாக்கினார். 4 ஓவரில் 25/3 ரன்னை எட்டியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. சாதுர்யமாக பந்துவீசிய அனுபவ அக்சர் படேல் 5 ரன் மட்டும் விட்டுக் கொடுக்க, இந்திய அணி தப்பியது. ஜப்பான் அணி 5 ஓவரில் 30/3 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர், 2 விக்கெட் சாய்த்தார்.

ஆட்டநாயகன் விருதை ஷ்ரேயஸ் ஐயர் வென்றார்.

வந்தே மாதரம்...

இந்திய கிரிக்கெட் அரங்கில், அன்னிய மண்ணில் நேற்று முதல் முறையாக போட்டி துவங்கும் முன், தேசிய பாடல் வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது. அடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கடந்த செப். 13ல் டில்லியில் நடந்த இந்தியா-ஆப்கன் மோதிய 'டி-20' போட்டியின் போது, இந்திய விளையாட்டு அரங்கில் முதல் முறையாக தேசிய பாடல் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

ஷ்ரேயஸ் முடிவு சரியா

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்த நிலையில், 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பேட்டிங்' தேர்வு செய்தது வியப்பாக இருந்தது. ஆடுகளம் 'சுழலுக்கு' ஒத்துழைப்பதை அறிந்து, ஜப்பான் 'ஸ்பின்னர்'கள் சார்லி (2/17), டகஹாஷி (1/13), பெஞ்சமின் (1/2) அசத்தினர்.

ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில்,''சனோ மைதான ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாக இருந்தது. சுழன்று வரும் பந்தை சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் தான் கவனமாக பேட் செய்தேன். 5 ஓவர் போட்டியில் முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஜப்பான் அணியின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. எங்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது,''என்றார்.

ஜப்பான் கேப்டன் கெண்டல் கூறுகையில்,''உலகின் சிறந்த இந்திய அணிக்கு கடைசி பந்து வரை சவால் கொடுத்தது பெருமையான விஷயம்,''என்றார்.

அபிஷேக் ஏமாற்றம்

சார்லி 'சுழலில்' திணறிய அபிஷேக் சர்மா, நேற்று தான் சந்தித்த முதல் பந்திலேயே 'கோல்டன் டக்' அவுட்டானார். 'டி-20' அரங்கில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை 'டக்' அவுட்டானவர் பட்டியலில் அபிஷேக் (10 முறை, 2026) முதலிடம் பெற்றார்.

புதிய வரலாறு

சர்வதேச 'டி-20' அரங்கில் நேற்று இந்திய அணி 200வது வெற்றியை (291 போட்டி, சூப்பர் ஓவர் வெற்றி சேர்த்து) பெற்றது. இம்மைல்கல்லை எட்டிய உலகின் அணி முதல் அணி என வரலாறு படைத்தது. அடுத்த இடத்தில் பாகிஸ்தான் (174 வெற்றி, 299 போட்டி), நியூசிலாந்து (137 வெற்றி, 267 போட்டி) உள்ளன.

* இந்திய அணி முதல் வெற்றியை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2006ல் (6 விக்., வித்தியாசம், ஜோபெர்க்) பெற்றது. 100வது வெற்றியை வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக (8 ரன் வித்தியாசம், 2022, கோல்கட்டா) பெற்றது. நேற்று 200வது வெற்றியை எட்டியது.

'வைடு' சர்ச்சை

ஜப்பான் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 8 ரன் தேவை என்ற நிலையில், அக்சர் படேல் வீசிய கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தது. 3வது பந்தை பாட்மோர் 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயற்சித்தார். அம்பயர் கிறிஸ் துர்கேட் (ஜப்பான்) 'வைடு' (4.3) என அறிவித்தார். அடுத்து வீசப்பட்ட பந்தையும் பாட்மோர் 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய, மீண்டும் 'வைடு' என அறிவித்தார். விக்கெட் கீப்பர் சாம்சன், அக்சர் படேல் அதிருப்தி அடைந்தனர். உடனே அம்பயருடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் விவாதித்தார். 'லெக் அம்பயராக' இருந்த அனுபவ கிறிஸ் பிரவுன் (நியூசி.,) தலையிட, 'வைடு' அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இது, 'வைடாக' இருந்திருந்தால், முடிவு மாறியிருக்கலாம். பொதுவாக பேட்டர் 'ரிவர்ஸ் ஸ்வீப்', 'ஸ்விட்ச்-ஹிட்' அடிக்க முயற்சிக்கும் போது, 'வைடு' கொடுப்பது கிடையாது. இதன் அடிப்படையில் இந்தியாவின் எதிர்ப்பு சரியானது தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us