/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம் * வரலாறு படைத்தது நியூசிலாந்து
/
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம் * வரலாறு படைத்தது நியூசிலாந்து
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம் * வரலாறு படைத்தது நியூசிலாந்து
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம் * வரலாறு படைத்தது நியூசிலாந்து
UPDATED : அக் 26, 2024 04:15 PM
ADDED : அக் 25, 2024 11:11 PM

புனே: புனே டெஸ்டில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த 2012க்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259, இந்தியா 156 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 198/5 ரன் எடுத்து, 301 ரன் முன்னிலை பெற்றிருந்தது. பிளன்டெல் (30), பிலிப்ஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிளன்டெலை (41), ஜடேஜா போல்டாக்கினார். சான்ட்னர் (4), டிம் சவுத்தீ (0), அஜாஸ் படேல் (1) நிலைக்கவில்லை. கடைசியில் ரூர்கே (0) ரன் அவுட்டானார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் ஆறுதல்
கடின இலக்கை விரட்டிய இந்திய அணி மீண்டும் சான்ட்னர் 'சுழலில்' சிக்கியது. கேப்டன் ரோகித் (8) அணியை கைவிட்டார். சுப்மன் 23 ரன் எடுக்க, ஜெய்ஸ்வால் 77 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 17 ரன் எடுத்தார். ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டானார். வாஷிங்டன் 21, அஷ்வின் 18 ரன் எடுத்து திரும்பினர்.
கடைசியில் ஜடேஜா (42) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 113 ரன்னில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை (2-0) என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி நவ. 1-5ல் மும்பையில் (வான்கடே) நடக்க உள்ளது.
முதன் முறை
கடந்த 1955-56 முதல் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது நியூசிலாந்து அணி. கடைசியாக 1988ல் இந்திய மண்ணில் நியூசிலாந்து (236/10, 279/10) அணி, வான்கடே டெஸ்டில் வெற்றி பெற்றது. இதன் பின், சமீபத்தில் பெங்களூரு டெஸ்டில் அசத்திய நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் 36 ஆண்டுக்குப் பின் முதல் வெற்றி பெற்றது.
தற்போது புனே டெஸ்டிலும் சாதித்த நியூசிலாந்து அணி, 68 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
முடிவுக்கு வந்த வெற்றிநடை
இந்திய அணி கடைசியாக 2012ல் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 1-2 என டெஸ்ட் தொடரை இழந்தது. இதன் பின் சொந்தமண்ணில் பங்கேற்ற 18 டெஸ்ட் தொடரிலும் (2013-2024) கோப்பை வென்றது இந்தியா. தற்போது 12 ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியா ஏமாற்ற, வெற்றி நடை முடிவுக்கு வந்தது.