/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புனேயில் 'பூனையான' இந்திய அணி * புண்ணானது ரசிகர்கள் நெஞ்சம் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம்
/
புனேயில் 'பூனையான' இந்திய அணி * புண்ணானது ரசிகர்கள் நெஞ்சம் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம்
புனேயில் 'பூனையான' இந்திய அணி * புண்ணானது ரசிகர்கள் நெஞ்சம் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம்
புனேயில் 'பூனையான' இந்திய அணி * புண்ணானது ரசிகர்கள் நெஞ்சம் * டெஸ்ட் தொடரை இழந்து ஏமாற்றம்
ADDED : அக் 26, 2024 10:52 PM

புனே: சொந்த மண்ணில் 'புலியாக' இருந்த இந்திய அணி, புனே டெஸ்ட் தோல்வியால் 'பூனையாக' மாறியது. 12 ஆண்டுக்குப் பின் உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழந்தது. நியூசிலாந்து அணி 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என வென்று வரலாறு படைத்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259, இந்தியா 156 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 198/5 ரன் எடுத்து, 301 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
ஜடேஜா 'மூன்று'
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிளன்டெலை (41), ஜடேஜா போல்டாக்கினார். சான்ட்னர் (4), டிம் சவுத்தீ (0), அஜாஸ் படேல் (1) நிலைக்கவில்லை. கடைசியில் ரூர்கே (0) ரன் அவுட்டானார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் 4, ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தனர். இந்தியாவுக்கு 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் விளாசல்
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தந்தது. ரோகித் (8) கைவிட்ட போதும், ஜெய்ஸ்வால், சுப்மன் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். இந்திய அணி 15 ஓவரில் இந்தியா 96/1 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 41 வது பந்தில் அரைசதம் கடந்தார். பின் சுப்மன் கில் (23) அவுட்டான போதும், அணியின் ரன் வேகம் (21 ஓவர், 127/2 ரன்) குறையவில்லை.
வீணான நம்பிக்கை
இதனால் இந்திய அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டும் என ரசிகர்கள் நம்பினர். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் எல்லாம் தலைகீழானது. சான்ட்னர் 'சுழலில்' ஜெய்ஸ்வால் (77) சிக்கினார். ரிஷாப் பன்ட் (0) வீணாக ரன் அவுட்டானார். கோலி (17), சர்பராசும் (9), சான்ட்னரிடம் 'சரண்' அடைந்தனர்.
வாஷிங்டன் 21 ரன் மட்டும் எடுத்தார். 127/2 என இருந்த இந்தியா, அடுத்து 40 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து, 167/7 என தள்ளாடியது. அஷ்வின் 18 ரன் எடுத்தார்.
கடைசியில் ஜடேஜா (42) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. சான்ட்னர் 6 விக்கெட் சாய்த்தார்.
நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை (2-0) என கைப்பற்றியது.
மூன்றாவது போட்டி நவ. 1-5ல் மும்பையில் (வான்கடே) நடக்க உள்ளது.
தேவை 4 வெற்றி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 62.82 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து வரும் 6 டெஸ்டில் (நியூசி., 1, ஆஸி., 5) 4ல் வென்றாக வேண்டும். இல்லையெனில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்கு ஏற்ப, உலக டெஸ்ட் பைனலுக்கு செல்வது தெரியவரும்.
தற்போது ஆஸ்திரேலியா (62.50), இலங்கை (55.56), நியூசிலாந்து (50.00), தென் ஆப்ரிக்கா (47.62) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதன் முறை
கடந்த 1955-56 முதல் இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து அணி. இதில் மொத்தம் 2 டெஸ்டில் தான் வென்றது. கடைசியாக 1988ல் இந்திய மண்ணில் நியூசிலாந்து (236/10, 279/10) அணி, வான்கடே டெஸ்டில் வெற்றி பெற்றது.
சமீபத்தில் பெங்களூரு டெஸ்டில் அசத்திய நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் 36 ஆண்டுக்குப் பின் முதல் வெற்றி பெற்றது.
தற்போது புனே டெஸ்டிலும் சாதித்த நியூசிலாந்து அணி, 68 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
ஆறாவது அணி
இங்கிலாந்து (17 தொடர், 5 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (12ல் 5), ஆஸ்திரேலியா (15ல் 4), பாகிஸ்தான் (8ல் 1), தென் ஆப்ரிக்காவுக்கு (7ல் 1) பின், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆறாவது அணியானது நியூசிலாந்து (13ல் 1).
முற்றுப்புள்ளி
இந்திய அணி கடைசியாக 2012ல் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 1-2 என டெஸ்ட் தொடரை இழந்தது. பின் சொந்தமண்ணில் பங்கேற்ற 18 டெஸ்ட் தொடரிலும் (2013-2024) கோப்பை வென்றது இந்தியா. தற்போது 12 ஆண்டுக்குப் பின் இந்தியா ஏமாற்ற, வெற்றி நடை முடிவுக்கு வந்தது.
4வது தோல்வி
இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக தோல்வியடைந்த கேப்டன் வரிசையில் கபில்தேவ் (20 டெஸ்ட், 4 தோல்வி), அசாருடன் (20ல் 4) இணைந்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார் ரோகித் (15ல் 4). முதலிடத்தில் பட்டோடி (27ல் 9) உள்ளார்.
157 ரன், 13 விக்கெட்
புனேயில் இரு இன்னிங்சில் 13 விக்கெட் (7+6) சாய்த்த சான்ட்னர், டெஸ்ட் அரங்கில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த மூன்றாவது நியூசிலாந்து பவுலர் ஆனார். முதல் இரு இடத்தில் ஹாட்லீ (15, எதிர்-ஆஸி.,), அஜாஸ் படேல் (14, எதிர்-இந்தியா) உள்ளனர்.
* இந்திய மண்ணில் அஜாஸ் படேல் (14, 2021, நியூசி.,), இயான் போத்தமிற்கு (13, 1980, இங்கிலாந்து) பின், டெஸ்டில் 13 அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்த 3வது பவுலர் ஆனார் சான்ட்னர்.
37 விக்கெட்
புனேயில் இரு அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், அதிகபட்சம் 37 விக்கெட் சாய்த்தனர். இதற்கு முன் 1969ல் நாக்பூர் டெஸ்டில் 37 விக்கெட் சுழலில் சரிந்தன. இந்த இரு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
முந்திய ஜெய்ஸ்வால்
சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில், ஒரே ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் குண்டப்பா விஸ்வநாத்தை (1979ல் 1047 ரன்) முந்தி முதலிடம் பிடித்தார் ஜெய்ஸ்வால் (1056).
* விஸ்வநாத், கவாஸ்கருக்குப் (1979) பின், சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில் ஒரே ஆண்டில் 1000க்கும் மேல் எடுத்த மூன்றாவது இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால்.
4331 நாளுக்குப் பின்...
இந்திய அணி கடந்த 2012, நவ. 17ல் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது (இங்கிலாந்து). தற்போது 4331 நாளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடரை கோட்டை விட்டது.
கோலி கோபம்
நேற்று 17 ரன்னில் அவுட்டான விரக்தியில் திரும்பினார் கோலி. அப்போது கேலரிக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த 'வாட்டர் பிரீசரை' பேட்டை வைத்து ஓங்கி அடித்து, கோபத்தை வெளிப்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸ்
நியூசிலாந்து 259
பேட்டிங்
கான்வே 76(141)
ரச்சின் 65(105)
பவுலிங்
வாஷிங்டன் 7/59
அஷ்வின் 3/64
இந்தியா 156
பேட்டிங்
ஜடேஜா 38(46)
ஜெய்ஸ்வால் 30(60)
பவுலிங்
சான்ட்னர் 7/53
பிலிப்ஸ் 2/26
இரண்டாவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 255
பேட்டிங்
லதாம் 86(133)
பிலிப்ஸ் 48(82)*
பவுலிங்
வாஷிங்டன் 4/56
ஜடேஜா 3/72
இந்தியா 245
பேட்டிங்
ஜெய்ஸ்வால் 77(65)
ஜடேஜா 42(84)
பவுலிங்
சான்ட்னர் 6/104
அஜாஸ் 2/43