ADDED : ஜூலை 14, 2026 11:18 PM

காலே: இலங்கைக்கு எதிரான ‛யூத்' டெஸ்டில் இந்தியாவின் லக்சயா, சாகர் அரைசதம் விளாசினர்.
இலங்கை சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ‛யூத்' டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது.
முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 344/4 ரன் எடுத்திருந்தது. செனுஜா (203), சமிகா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணிக்கு செனுஜா (233), சமிகா (45) நம்பிக்கை தந்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 424 ரன் குவித்து ‛டிக்ளேர்' செய்தது. இந்தியா சார்பில் ஜெகநாதன் ஹேம்சுதேஷன் 3, காவ்யா பரேஷ் படேல், பிரியான்ஷு சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லக்சயா ராய்சந்தானி, சாகர் விர்க் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்தனர்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 186/0 ரன் எடுத்திருந்தது. லக்சயா (93), சாகர் விர்க் (87) அவுட்டாகாமல் இருந்தனர்.
