தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/உலக கோப்பை கற்றுத் தந்த பாடம் * அபிஷேக் சர்மா மீண்டது எப்படி

உலக கோப்பை கற்றுத் தந்த பாடம் * அபிஷேக் சர்மா மீண்டது எப்படி

உலக கோப்பை கற்றுத் தந்த பாடம் * அபிஷேக் சர்மா மீண்டது எப்படி


ADDED : மார் 18, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''சமீபத்தில் முடிந்த 'டி-20' உலக கோப்பை தொடர் எனக்கு மிகச்சிறந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. கேப்டன் சூர்யகுமார், பயிற்சியாளர் காம்பிர் உள்ளிட்டோரது ஆதரவு, மீண்டு வர கைகொடுத்தது,'' என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. 'டி-20' அரங்கில் உலகின் 'நம்பர்-1' பேட்டர். துவக்கத்தில் மின்னல் வேக ரன்குவிப்பை வெளிப்படுத்தும் இவர், 'டி-20' உலக கோப்பை தொடரில் மிரட்டுவார் என நம்பப்பட்டது. மாறாக, இது சோதனைக் களமாக மாறியது. முதல் 3 போட்டியில் 'டக்' அவுட்டானார். 'சூப்பர்-8' சுற்றில் தென் ஆப்ரிக்காவுடன் 15 ரன் எடுத்தார். முக்கியமான ஜிம்பாப்வே போட்டியில் 55 ரன் எடுத்து மீண்டு வந்தார். அடுத்து 2 போட்டியில் 10, 9 என ஏமாற்றிய அபிஷேக் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான பைனலில், 21 பந்தில் 52 ரன் எடுத்து, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார்.

இதுகுறித்து அபிஷேக் கூறியது:

'டி-20' உலக கோப்பை தொடரில் ஓரிரு இன்னிங்ஸ் மட்டும் எனக்கு திருப்தியாக இருந்தது. பல போட்டிகள் எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் தந்தன. ஆனால், 'டாப் ஆர்டரில்' ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத் தான் செய்யும்.

அதிக ஆதரவு

துவக்கத்தில் பல போட்டிகளில் விரைவில் அவுட்டான போது, முதலில் ஏமாற்றமாக இருந்தது. அணிக்காக சாதிக்க வேண்டும் என்ற நிலையில், இப்படி நடந்தது கூடுதல் அதிர்ச்சி. எனினும் கேப்டன் சூர்யகுமார், பயிற்சியாளர் காம்பிர், சீனியர் வீரர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தனர். இது, உண்மையில் எனது அதிர்ஷ்டம் தான்.

அடுத்தடுத்து 'டக்' அவுட்டான போதும், ' இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்துங்கள், முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்,' என்றார் கேப்டன் சூர்யகுமார்.

'ஒரு சிறந்த இன்னிங்ஸ், அந்த வீரர், அணியின் நிலையை அப்படியே மாற்றிவிடும்,' என்றார் பயிற்சியாளர் காம்பிர். இது பெரிய நம்பிக்கையை தந்தது. கேப்டன், பயிற்சியாளர் முழு ஆதரவு தரும் போது, மைதானத்தில் எவ்வித பயமும் இன்றி, துணிச்சலாக நாம் செயல்படலாம்.

மீண்டது எப்படி

உலக கோப்பை பைனல் என்பதால் வழக்கத்தை விட சற்று அதிக எதிர்பார்ப்பு காணப்படுவது இயல்பு. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான பைனலுக்கு முன், எனது மனநிலை அமைதியாக இருந்தது. எப்போதும் போல இதுவும் சாதாரண ஒரு போட்டி தான் என்ற எண்ணத்தில், சிறப்பான முறையில் தயாராகினேன்.

போட்டியின் பல்வேறு சூழல்களை கற்பனை செய்து, இதற்கேற்ப எப்படி விளையாட வேண்டும் என திட்டமிட்டேன். பைனலில் நிதானமாக, அமைதியாக செயல்பட இந்த அனுபவம் கைகொடுத்தது.

சிறப்பான இன்னிங்சிற்குப் பின் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபடாமலும், மோசமான செயல்பாட்டுக்குப் பின் மனம் உடைந்து போகாமலும், சமநிலையில் இருக்க வேண்டும் என்பது தான், நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம். உலக கோப்பை போட்டிகளில் மன வலிமை, திட்டமிட்டு செயல்படுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விரைவில் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

யுவராஜ் 'அட்வைஸ்'

தனது வழிகாட்டி, இந்திய அணி முன்னாள் 'ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங் 44, குறித்து அபிஷேக் கூறுகையில்,'' யுவராஜிடம் ரெகுலராக பேசி வருகிறேன். 'அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு, இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையை சந்தித்தாக வேண்டும். ஆனால், திறமை மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து செயல்பட்டால், ரன்கள் வரத் துவங்கி விடும், யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே,' என 'அட்வைஸ்' செய்தார். இது மறுபடியும் கைகொடுத்தது,'' என்றார்.

அனுபவம் முக்கியம்

அபிஷேக் கூறுகையில்,'' அனுபவம் தான் ஒருவரை சிறந்த வீரராக மாற்றுகிறது. மிகப்பெரிய தொடர்களில் பேட்டிங்கில் ஏற்ற, இறக்கம் இருக்கும் போது, அதிகமாக கற்றுக் கொள்ளலாம். சமீபத்திய உலக கோப்பை தொடர், என்னை அதிக மனஉறுதி உள்ளவராகவும், அனுபவசாலியாகவும் மாற்றியது என நம்புகிறேன். இதில் கற்ற பாடத்தைக் கொண்டு, சிறந்த வீராராக வர வேண்டும் என்பது தான் எனது லட்சியம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us