புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் * சூர்யகுமாரை கழற்றி விட முடிவா
புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் * சூர்யகுமாரை கழற்றி விட முடிவா
ADDED : மே 08, 2026 11:05 PM

புதுடில்லி: இந்திய 'டி-20' அணி கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளார். சூர்யகுமார் யாதவை கழற்றி விட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.
இந்திய அணி கடந்த 2024ல் ரோகித் சர்மா தலைமையில் 'டி-20' உலக கோப்பை வென்றது. இதன் பின், ரோகித்திற்குப் பதில் சூர்யகுமார் யாதவ் 35, கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி, மீண்டும் 'டி-20' உலக கோப்பை கைப்பற்றியது. எனினும், சமீபத்திய போட்டிகளில் சூர்யகுமார், தொடர்ந்து தடுமாறுகிறார்.
நடப்பு லீக் தொடரில் மும்பை அணிக்காக 10 போட்டியில் 195 ரன் (சராசரி 19.5) மட்டும் எடுத்துள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 2028 உலக கோப்பை, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் உள்ளிட்ட தொடருக்கு முன், புதிய 'டி-20' அணியை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சூர்யகுமாரின் அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றாலும், நீண்ட கால திட்டம் அடிப்படையில் புதிய வீரரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளனர்.
இதற்கு ஷ்ரேயஸ் ஐயர் பொருத்தமான தேர்வாக இருக்கலாம். கடந்த 2024ல் கொல்கட்டா அணிக்கு இவர், லீக் தொடரில் கோப்பை வென்று தந்தார். அடுத்து பஞ்சாப் கேப்டனான இவர், 2025ல் அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். நடப்பு சீசனிலும் பஞ்சாப் அணி 10 போட்டியில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.
பேட்டிங் சாதகம்
தவிர பேட்டிங்கிலும் ஷ்ரேயஸ் ஐயர், ரன் மழை பொழிகிறார். 2024, 2025 லீக் சீசனில் 27 போட்டியில் 937 ரன் எடுத்தார். இம்முறை 10 போட்டியில் 333 ரன் எடுத்துள்ளார். நவீன 'டி-20' போட்டிக்கு ஏற்ப, ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
எனினும், கேப்டன் மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் ஜூன் மாதம் அயர்லாந்து செல்லும் இந்திய அணிக்கு, ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன் ஆகலாம்.
