தேவ்தத் படிக்கல் கலக்கல் சதம் * பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்
தேவ்தத் படிக்கல் கலக்கல் சதம் * பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்
ADDED : ஆக 08, 2026 10:58 PM

கொழும்பு: பயிற்சி போட்டியில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக. 15ல் காலேயில் துவங்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்தியா, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) லெவன் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி போட்டி கொழும்பு, என்.சி.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் நாளில் இலங்கை லெவன் அணி முதல் இன்னிங்சில் 363/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 'டக்' அவுட்டானார். பின் ராகுல், தேவ்தத் படிக்கல் அசத்தினர். கேஷரா பந்தில் ராகுல் (40) அவுட்டானார்.
படிக்கல் சதம்
உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல், கேஷரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். படிக்கல் (103) சதம் அடித்ததும் 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். ரிஷாப் பன்ட் (2), துருவ் ஜுரல் (1) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். சுதீரா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜடேஜா (63), குல்தீப் (1) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினர்.
மானவ் நம்பிக்கை
மானவ் சுதார், 41 ரன் எடுத்தார். கடைசி நேரத்தில் 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆன, சரன்ஸ் (22) சற்று கைகொடுக்க, இந்திய அணியின் ஸ்கோர், 300 ரன்களை எட்டியது. குர்னுார் பிரார், 4 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 356/6 ரன் (90 ஓவர்) எடுத்து, 6 ரன் பின் தங்கி இருந்தது. குர்னுார் (36 ரன், 18 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 45 ஓவர் பேட்டிங் செய்யலாம்.
