தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பிரசித் கிருஷ்ணா, சுதார் பிரமாதம் * இந்திய பவுலர்கள் அசத்தல்

பிரசித் கிருஷ்ணா, சுதார் பிரமாதம் * இந்திய பவுலர்கள் அசத்தல்

பிரசித் கிருஷ்ணா, சுதார் பிரமாதம் * இந்திய பவுலர்கள் அசத்தல்


ADDED : ஆக 25, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்தினர். பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்டில் பங்கேற்கிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் சதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சை 503/9 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில், இலங்கை அணி 8/2 ரன் எடுத்து, 495 ரன் பின்தங்கியிருந்தது.

கிருஷ்ணா 'வேகம்'

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' கமில் மிஷாரா (19) வெளியேறினார். பின் நான்காவது விக்கெட்டுக்கு கமிந்து மெண்டிஸ்-சூரியபண்டாரா, 87 ரன் சேர்த்தனர். கிருஷ்ணா பந்தில் மெண்டிஸ் (32) அவுட்டானார். உணவு இடைவேளையின் போது இலங்கை, 130/4 ரன் எடுத்து தவித்தது. பின் மழை பெய்ய, ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும், மானவ் சுதார் 'சுழலில்' கேப்டன் தனஞ்சயா டி சில்வா (8) சிக்கினார். டெஸ்டில் முதல் அரைசதம் கடந்த சூரியபண்டாரா (80), ரவிந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். சிராஜ் பந்தில் டிக்வெல்லா (0) நடையை கட்ட, 173/7 ரன் எடுத்து தத்தளித்தது.

சோனல் சோதனை

இந்த சமயத்தில் சோனல் தினுஷா, 'டெயிலெண்டர்கள்' சேர்ந்து இந்திய பவுலர்களை சோதித்தனர். 8வது விக்கெட்டுக்கு தினுஷா- நுவந்தா கேஷரா 57 ரன் சேர்த்தனர். சுதார் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய தினுஷா, தொடர்ந்து 3வது அரைசதம் அடித்தார். சுதார் வலையில் கேஷரா (18) வெளியேறினார். அடுத்து வந்த லஹிரு குமாரா-தினுஷா 9வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தனர். இதில் 65 நிமிடம் தாக்குப்பிடித்த குமாரா, 50 பந்துகளை சமாளித்து 8 ரன் எடுத்தார். மழை, போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 265/8 ரன் எடுத்து, 238 ரன் பின்தங்கியிருந்தது. 'பாலோ-ஆன்' தவிர்க்க இன்னும் 39 ரன் எடுக்க வேண்டும். தினுஷா (85), லஹிரு குமாரா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால், இந்திய அணி, இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம்.

தினுஷா ஒரு தினுசா

இலங்கை வீரர் சோனல் தினுஷா, இந்திய 'ஸ்பின்னர்'களுக்கு தொடர்ந்து சவால் கொடுக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 'ஸ்பின்னர்'களுக்கு எதிராக 'ஸ்வீப் ஷாட்' மூலம் அதிக ரன் எடுத்த வீரர்களில் தினுஷா (106 ரன், எதிர், இந்தியா, 2026) 4வது இடம் பெற்றார். முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (160 ரன், எதிர், இலங்கை, 2021) உள்ளார்.

இலங்கை வீரருக்கு எச்சரிக்கை

இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசியில், போதிய வெளிச்சம் இல்லை என இலங்கை வீரர்கள் புகார் கூறினர். அப்போது மானவ் சுதார், பந்தில் 'நைட்வாட்ச்மேனாக' வந்த பிரபாத் ஜெயசூர்யா (2) எல்.பி.டபிள்யு., ஆனார். 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. இந்த விரக்தியில் எல்லையில் இருந்த விளம்பர பலகை மீது பேட் கொண்டு பலமாக அடித்தார். 'டிரஸ்சிங் ரூமில்' தனது 'கிளவ்சை' துாக்கி எறிந்தார். ஐ.சி.சி., விதிமுறைப்படி மைதானத்தில் இருக்கும் விளையாட்டு உபகரணங்களை சேதப்படுத்துவது தவறு. இது பற்றி ஐ.சி.சி., 'மேட்ச் ரெப்ரி' ஆண்டி பைகிராப்ட் விசாரித்தார். தவறை ஒப்புக்கொண்ட பிரபாத் ஜெயசூர்யாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி, அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்தார். இப்போட்டியில் ஏற்கனவே ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது வீரர் மீது ஐ.சி.சி., ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us