தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கொழும்பில் கோட்டைவிட்டது இந்தியா * 'டிரா' செய்து ஏமாற்றம்

கொழும்பில் கோட்டைவிட்டது இந்தியா * 'டிரா' செய்து ஏமாற்றம்

கொழும்பில் கோட்டைவிட்டது இந்தியா * 'டிரா' செய்து ஏமாற்றம்

2


ADDED : ஆக 27, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஆக 27, 2026 11:12 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி நாளில் கோட்டை விட்டது. பவுலர்கள் கைவிட, போட்டி 'டிரா' ஆனது. இலங்கை சார்பில் தினுஷா சதம் அடித்தார்.

இலங்கை சென்ற இந்திய அணி, இரண்டு டெஸ்டில் பங்கேற்றது. காலேயில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 503/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, நான்காவது நாள் ஆட்ட முடிவில் 229/6 ரன் எடுத்திருந்தது. கைவசம் 4 விக்கெட் மட்டும் மீதம் இருந்த நிலையில், இலங்கை அணி 16 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. சோனல் தினுஷா (7), நுவந்தா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

பவுலர்கள் ஏமாற்றம்

நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மீதமுள்ள 4 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. தினுஷா, நுவந்தா என இருவரும் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. உணவு இடைவேளை வரை இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர் இந்திய பவுலர்கள். 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 112 ரன் சேர்த்தது. இந்நிலையில் 8வது வீரராக களமிறங்கி 150 பந்துகள் தாக்குப்பிடித்த நுவந்தாவை (46), மானவ் சுதார் வெளியேற்றினார். அடுத்து வந்த பிரபாத் 2 ரன் (28 பந்து) எடுத்த நிலையில் ஜடேஜா சுழலில் சிக்கினார்.

தினுஷா சதம்

அடுத்த இரு விக்கெட்டுகளை இந்தியா எளிதில் சாய்த்து விடும் என நம்பப்பட்ட நிலையில் தனது 5வது டெஸ்டில் விளையாடிய தினுஷா, லகிரு குமாரா ஜோடி, சுமார் 28 ஓவர்கள் தாக்குபிடித்தது. தினுஷா இத்தொடரில் மூன்றாவது சதம் (196 பந்து) எட்டினார். இலங்கை ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. மீண்டும் வந்த ஜடேஜா, லகிருவை (12 ரன், 90 பந்து) அவுட்டாக்கினார்.

மறுபடியும் பேட்டிங்கை தொடர்ந்த இலங்கை அணி 429/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது. தினுஷா (133), அசிதா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடைசி ஒரு மணி நேரத்தில், 17 ஓவரில் இந்தியா 217 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 1-0 என தொடரை கைப்பற்றியது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வெற்றி

கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,'' எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். 154 ஓவர்கள் பீல்டிங் செய்துள்ளோம். இதற்கும் மேல் வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. அந்த நேரத்தில், சிறந்த முடிவு எடுக்கிறோம். ஆனால், சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. மற்றபடி, என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்டெ் இன்று வெற்றி பெற்றுள்ளது,'' என்றார்.

முதன் முறை

இலங்கை அணிக்கு 'பாலோ ஆன்' கொடுத்த 9 டெஸ்டில், 8ல் இந்தியா வெற்றி பெற்றது. முதன் முறையாக நேற்று கொழும்பு டெஸ்ட் 'டிரா' ஆனது.

'செக்' வைத்த தினுஷா

இலங்கை பேட்டர் தினுஷா 25. மொத்தம் 2 டெஸ்டில் 1139 நிமிடம் பேட்டிங் செய்து, 722 பந்துகளை சந்தித்து, 3 சதம் உட்பட 420 ரன் (100, 84, 103, 133) எடுத்தார். கொழும்பு டெஸ்ட், இரண்டாவது இன்னிங்சில், 7 மணி நேரம் (420 நிமிடம்) தாக்குப்பிடித்து, 264 பந்துகளை எதிர்கொண்டு, 133 ரன் எடுத்து, போட்டி 'டிரா' ஆக கைகொடுத்தார்.

* ஒரே டெஸ்டில் பேட்டிங் ஆர்டரில் 6 அல்லது அதற்கு பின் களமிறங்கி, இரு இன்னிங்சிலும் சதம் அடித்த நான்காவது இலங்கை வீரர், ஒட்டுமொத்தமாக 5வது வீரர் ஆனார் தினுஷா (103, 133*).

* முதல் 5 டெஸ்டில் இலங்கை அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர்களில் கமிந்து மெண்டிசிற்கு (631) அடுத்து 2வது இடம் பெற்றார் தினுஷா (606).

* டெஸ்ட் அரங்கில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த மூன்றாவது இலங்கை வீரர் தினுஷா. முன்னதாக துலீப் மெண்டிஸ் (1982ல் 105, 105), அரவிந்த டி சில்வா (1997ல் 146, 120) இதுபோல அசத்தினர்.

* 'பாலோ ஆன்' ஆன டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த மூன்றாவது வீரர் தினுஷா.

* ஒரு டெஸ்ட் தொடரில் 'ஸ்பின்னர்'களுக்கு எதிராக 'ஸ்வீப் ஷாட்' மூலம் அதிக ரன் எடுத்த வீரர்களில் தினுஷா (173 ரன், எதிர், இந்தியா, 2026) முதலிடம் பெற்றார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (160 ரன், எதிர், இலங்கை, 2021) உள்ளார்.

திணறிய பவுலர்கள்

இலங்கை அணி முன்னணி பேட்டர்களை இழந்த நிலையில், கைவசம் 4 விக்கெட் மட்டும் மீதம் இருந்தது. நேற்றைய கடைசி நாளில் 81.2 ஓவர்கள் பந்து வீசியும், 2 விக்கெட் தான் வீழ்த்த முடிந்தது. 'டெயிலெண்டர்களை' அவுட்டாக்க முடியாமல் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.

* வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், பிரசித் கிருஷ்ணா என யாரும் ஒரு 'யார்க்கர்' கூட வீசவில்லை. பந்துவீச்சில் மாற்றம் செய்து விக்கெட் சாய்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் 'ஸ்பின்னர்கள்' சொதப்பினர்.

* இதனால், 8, 9, 10 வதாக களமிறங்கிய பேட்டர்கள் மொத்தம் 292 பந்துகள் (48.4 ஓவர்) தாக்குப் பிடித்தனர்.

ஐந்தாவது இடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், நான்காவது சீசனில், இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், இந்திய அணி, 11 டெஸ்டில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் (2 'டிரா'), 51.52 சதவீத புள்ளியுடன் 5வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (80.00), தென் ஆப்ரிக்கா (75.00) முதல் இரு இடத்தில் உள்ளன.

'பாலோ ஆன்' சரியா

கொழும்பு டெஸ்டில் அவ்வப்போது மழையால் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 213 ரன் பின் தங்கியதால் இலங்கை அணிக்கு இந்தியா 'பாலோ ஆன்' கொடுத்தது. ஆனால் முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் வீசிய இந்திய பவுலர்கள், அடுத்து தொடர்ந்து 154 ஓவர்கள் பந்துவீச நேர்ந்தது. இதனால் சோர்ந்து விட்டனர் எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us