தேர்வுக்குழு தலைவராக லட்சுமண் * அகார்கரை மாற்ற பி.சி.சி.ஐ., திட்டம்
தேர்வுக்குழு தலைவராக லட்சுமண் * அகார்கரை மாற்ற பி.சி.சி.ஐ., திட்டம்
ADDED : ஆக 05, 2026 11:10 PM

புதுடில்லி: இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார். அகார்கருக்கு பதவி நீட்டிக்கப்படாது எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக, கடந்த 2023 முதல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகார்கர் 48, உள்ளார். இவரது பதவிக்காலத்தில் இந்திய அணி இரண்டு 'டி-20' உலக கோப்பை (2024, 2026), ஒரு சாம்பியன்ஸ் டிராபி (2025) என மூன்று ஐ.சி.சி., கோப்பை வென்றது.
உள்ளூர் போட்டிகளில் திறமை வெளிப்படுத்திய, பல்வேறு புதிய வீரர்களை தேசிய அணிக்கு கொண்டு வந்தார் அகார்கர். அதேநேரம், 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா, கோலி என இருவரும் டெஸ்ட், 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்றனர். தவிர, அஷ்வின், புஜாரா, ரகானே என பலர் விடைபெற்றனர்.
அகார்கர், பதவிக்காலம் வரும் செப். மாதத்துடன் முடிகிறது. அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரை பதவியில் தொடர, இவர் ஆர்வமாக உள்ளார். வரும் இலங்கை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுக்கு ஏற்ப, இதுகுறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
திடீர் மனமாற்றம்
ஆனால், அகார்கர் பதவியை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) விரும்பவில்லை. பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் உயர் செயல்திறன் பிரிவு தலைவராக உள்ள முன்னாள் வீரர் லட்சுமணை, தேர்வுக்குழு தலைவராக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் காம்பிர் இல்லாத நிலையில், ஜிம்பாப்வே தொடரில் தற்காலிக பயிற்சியாளராக லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
காரணம் என்ன
சமீபத்தில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்றார் துவக்க வீரர் ரோகித் சர்மா. மறுபக்கம், 'உலக கோப்பை அணியில் ரோகித் இடம் பெற மாட்டார்,' என்ற தங்களது முடிவை, தேர்வுக்குழுவினர், பி.சி.சி.ஐ.,யிடம் முன்னதாக தெரிவித்துள்ளனர்.
தொடரின் முதல் இரு போட்டியில் ரோகித், 11, 26 என ஏமாற்ற, மூன்றாவது போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கேற்ப, 'கடைசி' போட்டியை காண ரோகித் குடும்பத்தினர் நேரில் வந்தனர். மாறாக இதில் 138 ரன் விளாச, 'ரோகித் இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார். வரும் உலக கோப்பை தொடர் வரை நீடிப்பார்,' என, பி.சி.சி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக, தேர்வுக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். தவிர, பி.சி.சி.ஐ.,-அகார்கர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அகார்கருக்குப் பதில் லட்சுமண் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது,
நான்கு 'சுழல்'
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஆக. 15ல் காலேயில் நடக்க உள்ளது. முன்னதாக, இலங்கை உள்ளூர் அணியுடன், மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் நாளை, இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இதனிடையே இலங்கை தொடருக்காக இந்திய பேட்டர்கள் தயாராகும் வகையில், வலைப்பயிற்சியில் பந்துவீச, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், தனுஷ் கொடியன், விப்ராஜ் நிஹாம் என நான்கு சுழற்பந்து இலங்கை சென்றுள்ளனர். டெஸ்டில் களமிறங்கும் 'லெவன்' அணியில் இவர்கள் இடம் பெற வாய்ப்பில்லை. என்றாலும், வலைப்பயிற்சி அனுபவம் எதிர்காலத்தில் கைகொடுக்கலாம்.
