மதுரை அணி 'திரில்' வெற்றி * திருச்சி அணிக்கு ஏமாற்றம்
மதுரை அணி 'திரில்' வெற்றி * திருச்சி அணிக்கு ஏமாற்றம்
ADDED : ஆக 05, 2026 11:09 PM

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 'டி-20' கிரிக்கெட் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ராஜலிங்கம் நம்பிக்கை
திருச்சி அணிக்கு ராஜ் குமார், சுரேஷ் குமார் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 6 ஓவரில் 66/0 ரன் எடுத்தது. 7 வது ஓவரை வீசிய ராஜலிங்கம், 2வது பந்தில் சுரேஷ் குமார் (43), 5வது பந்தில் ராஜ் குமாரை (24) அவுட்டாக்க, அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. திருச்சி அணி 20 ஓவரில் 173/7 ரன் எடுத்தது. மதுரை வீரர் ராஜலிங்கம், அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
மதுரை அணிக்கு சித்தார்த் (1), ராம்குமார் (16) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சதுர்வேத் (27), கிரண் (38), கேப்டன் பாலசந்தர் (23) சற்று உதவினர். மதுரை அணி ஒரு கட்டத்தில் 132/8 என திணறியது.
கடைசி 17 பந்தில் 42 ரன் தேவைப்பட்டன. அப்போது இணைந்த சரவணன், குர்ஜப்னீத் சிங் ஜோடி வேகமாக ரன் சேர்க்க, கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டன. முதல் இரு பந்தில் சரவணன், 6, 4 என விளாச வெற்றி எளிதானது. மதுரை அணி 19.4 ஓவரில் 174/8 ரன் எடுத்து, 'திரில்' வெற்றி பெற்றது. சரவணன் (26), குர்ஜப்னீத் சிங் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
