/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'வேகப்புயல்' பும்ரா இருக்க பயமேன்... * பயிற்சியாளர் காம்பிர் நம்பிக்கை
/
'வேகப்புயல்' பும்ரா இருக்க பயமேன்... * பயிற்சியாளர் காம்பிர் நம்பிக்கை
'வேகப்புயல்' பும்ரா இருக்க பயமேன்... * பயிற்சியாளர் காம்பிர் நம்பிக்கை
'வேகப்புயல்' பும்ரா இருக்க பயமேன்... * பயிற்சியாளர் காம்பிர் நம்பிக்கை
ADDED : நவ 11, 2024 11:15 PM

மும்பை: ''முதல் டெஸ்டில் ரோகித் சர்மா விலகினால், கேப்டன் பதவியை பும்ரா ஏற்பார். துவக்க வீரராக ராகுல் களமிறங்குவார்,'' என காம்பிர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- -கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22ல் துவங்குகிறது. இதற்காக தலைமை பயிற்சியாளர் காம்பிர் அடங்கிய இந்திய அணியின் இரண்டாவது குழுவினர் நேற்று மும்பையில் இருந்து பெர்த் புறப்பட்டனர். இவர்களுடன் கேப்டன் ரோகித் செல்லவில்லை. தனிப்பட்ட காரணங்களால், இந்தியாவில் தங்கியுள்ளார்.
இது குறித்து காம்பிர் அளித்த பேட்டி:
முதல் டெஸ்டில் ரோகித் பங்கேற்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. ஒருவேளை அவர் விலகினால், தற்போதைய துணைக் கேப்டன் பும்ரா, கேப்டனாக பொறுப்பேற்பார். ரோகித் இல்லாத பட்சத்தில் துவக்க வீரர் இடத்திற்கு ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் உள்ளனர். ராகுலுக்கு அனுபவம் சாதகம். துவக்க வீரர், 3வது, 6வது என பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாடும் திறன் பெற்றவர். ஒருநாள் போட்டிகளில் விக்கெட்கீப்பராகவும் செயல்படுவார். இவரை போன்ற திறமையான வீரரை உலகில் காண்பது அரிது. முதல் டெஸ்டில் ரோகித் பங்கேற்க தவறினால், துவக்க வீரராக ராகுல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
நெருக்கடி அதிகம்
அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். இதனால் தான் ஷர்துல் தாகூர் வாய்ப்பு பெற இயலவில்லை. 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா போன்ற புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முகமது ஷமி இல்லாததால், 'வேகப்புயல்' பும்ரா மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. இவர் கண்டிப்பாக சாதிப்பார். ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் போன்ற அனுபவம் இல்லாத 'வேகங்கள்' தரமாக பந்துவீசுவர் என நம்புகிறேன்.
'நெருப்பு' ஆட்டம்
சிறந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்னவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்களது அனுபவம், இளம் வீரர்களுக்கு உதவும். முன்னதாகவே பெர்த் செல்கிறோம். அடுத்த 10 நாள் முக்கியமானவை. இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 22ம் தேதி காலையில் டெஸ்ட் துவங்கும். முதல் பந்தில் இருந்தே நெருப்பாக செயல்பட தயாராக உள்ளோம்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.
பாண்டிங் மீது பாய்ச்சல்
சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா (91 ரன்), கோலியின் (93 ரன்) ஆட்டம் எடுபடவில்லை. இது பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறுகையில்,''கடந்த 5 ஆண்டுகளில் கோலி 2 டெஸ்ட் சதம் மட்டும் அடித்துள்ளது கவலைக்குரிய விஷயம்,''என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த காம்பிர்,''இந்திய கிரிக்கெட் உடன் பாண்டிங்கிற்கு என்ன தொடர்பு இருக்கிறது. அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும். என்னை பொறுத்தவரை ரோகித், கோலியின் 'பார்ம்' பற்றி கவலைப்படவில்லை. இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்துள்ளனர். தொடர்ந்து சாதிக்க காத்திருக்கின்றனர். சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால், இந்திய டெஸ்ட் அணி மாற்றத்தை நோக்கி நகர்வதாக உணரவில்லை. சீனியர்களிடம் இன்னும் திறமை உள்ளது. நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என்ற தாகம் உள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பணி கடினமானது என்பது எனக்கு தெரியும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது ஏமாற்றம். இதற்கான விமர்சனங்களை ஏற்க தயாராக உள்ளேன்,''என்றார்.
மஞ்ச்ரேக்கர் கோபம்
ரோகித், கோலி தொடர்பான கேள்விகளுக்கு காம்பிர் காட்டமாக பதில் அளித்தார். இவரது பேச்சு சரியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தார். பேட்டியின் எந்த பகுதியில் குறை இருந்தது என்பதை குறிப்பிடவில்லை.
மஞ்ரேக்கர் கூறுகையில்,''காம்பிரின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். இவரிடம் சரியான நடத்தை, வார்த்தைகளை காண முடியவில்லை. இந்தப் பணியில் இருந்து இவரை ஒதுக்கி வைப்பதே நல்லது. பத்திரிகையாளர்களை கேப்டன் ரோகித் அல்லது தேர்வுக் குழு தலைவர் அகார்கர் சந்திக்கலாம்,'' என்றார்.