/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பவுலர்கள் அபாரம் * இங்கிலாந்து நிதான ஆட்டம்
/
இந்திய பவுலர்கள் அபாரம் * இங்கிலாந்து நிதான ஆட்டம்
இந்திய பவுலர்கள் அபாரம் * இங்கிலாந்து நிதான ஆட்டம்
இந்திய பவுலர்கள் அபாரம் * இங்கிலாந்து நிதான ஆட்டம்
ADDED : ஜூலை 10, 2025 11:21 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி அபாரமாக பந்துவீச, இங்கிலாந்து அணி வேகமாக ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், இம்முறை பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில், பும்ரா இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் டங்க் நீக்கப்பட்டு, ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராவ்லே ஜோடி மந்தமான துவக்கம் தந்தது. வேகமாக ரன் சேர்க்கும் இங்கிலாந்து வீரர்கள் நேற்று தடுமாறினர். முதல் ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்து அணி 39/0 ரன் (13 ஓவர்) மட்டும் எடுத்தது.
இதன் பின் நிதிஷ் குமாரை அழைத்தார் கேப்டன் சுப்மன் கில். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. மூன்றாவது பந்தில் டக்கெட் (23 ரன், 40 பந்து), கடைசி பந்தில் கிராவ்லேயை (18 ரன், 43 பந்து) வெளியேற்றினார்.
ரூட் 99 ரன்
அடுத்து ஜோ ரூட், போப் இணைந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 35.4 வது ஓவரில் இங்கிலாந்து அணி 100 ரன்களை (101/2) கடந்தது. நிதிஷ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரூட், டெஸ்டில் 67வது அரைசதம் (102 பந்து) அடித்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த நிலையில், ஜடேஜா 'சுழலில்' சிக்கினார் போப் (44). பும்ரா 'வேகத்தில்' ஹாரி புரூக் (11) போல்டானார். பின் ரூட், ஸ்டோக்ஸ் இணைந்து மந்தமான பேட்டிங்கை வெளி்ப்படுத்தி, விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251/4 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் (99), ஸ்டோக்ஸ் (39) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் நிதிஷ் குமார் 2, பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
2 விக்கெட்
இர்பான் பதானுக்கு (2002, கராச்சி, எதிர்-பாக்.,) அடுத்து முதல் ஓவரில் 2 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் நிதிஷ் குமார். நேற்று இவர் தனது முதல் ஓவரில் டக்கெட், கிராவ்லியை அவுட்டாக்கினார்.
ரிஷாப் காயம்
விக்கெட் கீப்பிங் செய்த போது ரிஷாப், வலது புறமாக பாய்ந்து, பும்ரா வீசிய பந்தை (33.1 ஓவர்) தடுத்தார். இதனால் இடதுகை ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் மீண்டும் பணியை தொடர்ந்தார். அதிக வலி காரணமாக ரிஷாப் (34 ஓவர்) வெளியேறினார். துருவ் ஜுரல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
மந்தமான ஆட்டம்
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்துவீசியதால், இங்கிலாந்தின் அதிரடி 'பாஸ் பால்' ஆட்டம் எடுபடவில்லை. மந்தமாக பேட் செய்ய, உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 83/2 ரன் எடுத்தது. பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் (2022, நியூசி.,) வருகைக்குப் பின், முதலில் களமிறங்கிய 17 டெஸ்டில், இங்கிலாந்து அணியின் குறைந்த ரன்ரேட் (3.32 ரன்) இது ஆனது.
இந்தியாவின் சிராஜ், ஜோ ரூட்டை பார்த்து,'பாஸ் பால்' ஆட்டம் என்னாச்சு,' என்றார். அருகில் இருந்த சுப்மன் கில், இங்கிலாந்து வீரர்களை நோக்கி,' இனி விளாசல் ஆட்டம் கிடையாது நண்பர்களே. வழக்கமான டெஸ்ட் போல விளையாடுங்கள்,' என்றார்.
ரூட் '3000'
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் 3000 ரன் எடுத்த முதல் வீரர் ஆனார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இவர் 33 டெஸ்டில் 3054 ரன் எடுத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் பாண்டிங் 2555 ரன் (29 டெஸ்ட்) எடுத்ததே அதிகம்.