/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிராஜ், கிருஷ்ணா ராஜ்யம்... * இந்திய அணி முன்னிலை
/
சிராஜ், கிருஷ்ணா ராஜ்யம்... * இந்திய அணி முன்னிலை
ADDED : ஆக 02, 2025 12:13 AM

லண்டன்: ஓவல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது இங்கிலாந்து அணி. 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது.
6 ரன், 4 விக்.,
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. டங்க் வீசிய இரண்டாவது ஓவரில், ஓவரில் கருண் (57) அவுட்டானார். மறுபக்கம் 'வேகத்தில்' மிரட்டினார் அட்கின்சன். இவரது 'ஷார்ட் பிட்ச்' பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்ட வாஷிங்டன் (26), ஓவர்டனிடம் 'கேட்ச்' கொடுத்தார். முதல் 20 நிமிடத்தில் இரு பேட்டர்களை இழந்த இந்தியா 220/8 என திணறியது.
அட்கின்சன் ஓவரில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 'டக்' அவுட்டாகினர். கடைசி 6 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல் அவுட்டானது. சொந்தமண்ணில் (ஓவல்) முதன் முறையாக அட்கின்சன், 5 விக்கெட் சாய்த்தார்.
'சூப்பர்' துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே அதிரடி துவக்கம் தந்தனர். ஆகாஷ் தீப் பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப்' முறையில் சிக்சருக்கு அனுப்பி மிரட்டினார் டக்கெட். ஆகாஷ் வீசிய 6 வது ஓவரில் டக்கெட், மூன்று பவுண்டரி அடிக்க, ஸ்கோர் 'டி-20' போட்டி போல, மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 10 ஓவரில் 71/0 ரன் எடுத்தது.
போட்டியின் 13வது ஓவரை வீசினார் ஆகாஷ். 5வது பந்தில் மீண்டும் 'ரிவர்ஸ் ஸ்கூப்' செய்ய முயன்றார் டக்கெட் (43). பந்து இவரது கிளவ்சில் பட்டு, ஜுரலிடம் 'கேட்ச்' ஆக சென்றது. டெஸ்டில் டக்கெட்டை 4வது முறையாக (5 இன்னிங்ஸ்) அவுட்டாக்கினார் ஆகாஷ்.
சிராஜ் நம்பிக்கை
மறுபக்கம் வேகத்தில் கைகொடுத்தார் சிராஜ். இவரது பந்தில் கேப்டன் போப் (22) எல்.பி.டபியுள்., ஆனார். முதலில் அம்பயர் அசன் ராஜா, அவுட் தர மறுத்தார். கடைசி வினாடியில் சுப்மன் 'ரிவியூ' கேட்டார். 'ரீப்ளேயில்' பந்து போப் ஸ்டம்சை தகர்க்க, இந்திய வீரர்கள் கொண்டாடினர். தொடர்ந்து அனுபவ ஜோ ரூட் (29), பெத்தெல் (6) என இருவரையும் 'எல்.பி.டபிள்யு.,' முறையில் வெளியேற்றினார் பிரசித் கிருஷ்ணா, 'வேகத்தில்' ஸ்மித் (8), ஓவர்டன் (0), அட்கின்சன் (11) அவுட்டாகினர்.
அரைசதம் அடித்த புரூக் (53), சிராஜ் பந்தில் போல்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல் அவுட்டானது. 23 ரன் முன்னிலை பெற்றது. இந்தியாவின் சிராஜ், பிரசித் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
ஜெய்ஸ்வால் அரைசதம்
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் (7), சாய் சுதர்சன் (11) 'ஷாக்' கொடுத்தனர். 20, 40 ரன்னில் என இரு முறை கண்டம் தப்பிய ஜெய்ஸ்வால், அரைசதம் அடித்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வந்த, 2வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 75/2 ரன் எடுத்து 52 ரன் முன்னிலை பெற்றது. ஜெய்ஸ்வால் (51), 'நைட் வாட்ச்மேன்' ஆகாஷ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
பும்ரா விடுவிப்பு
இங்கிலாந்து தொடரில் முதல் 4 டெஸ்டில் 3ல் மட்டும் விளையாடினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஓவலில் நடக்கும் ஐந்தாவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. நேற்று இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிக்கப்பட்டார்.
அடுத்து ஆசிய கோப்பை தொடரில் (செப்., 9-28) இந்தியா பங்கேற்றால் பும்ரா விளையாடலாம். ஒருவேளை பும்ரா விலகினால், அடுத்து அக்டோபரில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களமிறங்குவார். அதுவரை பும்ராவுக்கு ஓய்வு தான்.
34 பந்தில்...
இந்திய அணி நேற்று காலை 204/6 ரன் (64 ஓவர்) என களமிறங்கியது. கூடுதலாக 34 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட இந்தியா, 224ல் (69.4 ஓவர்) ஆல் அவுட்டானது. கடைசி 6 ரன்னில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதிவேக '100'
டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்களை, வேகமாக எடுத்த மூன்றாவது அணியானது இங்கிலாந்து (14.4 ஓவர், 101/1). ஆஸ்திரேலியா (14 ஓவர், பெர்த், 2011/12), வங்கதேசம் (14.10 ஓவர், மிர்புர், 2007) முதல் இரு இடத்தில் உள்ளன.
சிராஜ் '200'
நேற்று போப்பை அவுட்டாக்கிய சிராஜ், சர்வதேச அரங்கில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய, 15வது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆனார். இவர் டெஸ்டில் 116 (40 போட்டி), ஒருநாள் அரங்கில் 71 (44), 'டி-20'ல் 14 (16) என மொத்தம் 100 போட்டியில் 202 விக்கெட் சாய்த்தார். முதல் 3 இடத்தில் கபில் தேவ் (687), ஜாகிர் கான் (610), ஸ்ரீநாத் (551) உள்ளனர்.
வோக்ஸ் விலகல்
ஓவல் டெஸ்ட் முதல் நாள் கடைசி நேரத்தில் (57.5 வது ஓவர்), கருண் அடித்த பந்து பவுண்டரி நோக்கிச் சென்றது. இதை தடுக்க பாய்ந்தார் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ். அப்போது இடது தோளில் காயமடைந்த இவர், ஓவல் டெஸ்டில் இருந்து விலகினார். இத்தொடரில் 1000 பந்துக்கும் மேல் (மொத்தம் 1086) வீசிய முதல் பவுலரான வோக்ஸ், 11 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இவரது விலகல் இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பாக அமையலாம்.
1896க்குப் பின்...
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், 13 டெஸ்டில் 60 விக்கெட் சாய்த்தார். ஸ்டிரைக் ரேட் 34.9 ஆக உள்ளது. டெஸ்ட் அரங்கில் 129 ஆண்டுக்குப் பின், 35க்கும் குறைந்த 'ஸ்டிரைக் ரேட்டில்' முதல் 60 விக்கெட் சாய்த்த பவுலர் என சாதனை படைத்தார் அட்கின்சன். முன்னதாக 1896ல் ஜார்ஜ் லோமான் (இங்கிலாந்து), 34.1 ஸ்டிரைக் ரேட்டில் இதுபோல விக்கெட் சாய்த்து இருந்தார்.
ஆகாஷ்-டக்கெட் மோதல்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப். பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்டில், இங்கிலாந்தின் டக்கெட்டை இருமுறையும் அவுட்டாக்கினார். நேற்று ஆகாஷை பார்த்து,' இங்கு என்னை அவுட்டாக்க முடியாது,' என்றார். இதன் பின் இருவருக்குமான மோதல் விறுவிறுப்பாக இருந்தது. கடைசியில் டக்கெட்டை அவுட்டாக்கியதும், அவரது தோளில் கைவைத்து, சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.
7220 ரன்
சொந்தமண்ணில் பங்கேற்ற டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இந்தியாவின் சச்சினை (7216) முந்திய இங்கிலாந்தின் ஜோ ரூட் (7220 ரன்), இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (7578) உள்ளார்.
* தவிர சொந்தமண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில், 2000 ரன் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் ஜோ ரூட் (2000, எதிர்-இந்தியா). முன்னதாக ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (2354, எதிர்-இங்கிலாந்து) முதலிடத்தில் உள்ளார்.
87 ரன், 6 விக்கெட்
நேற்று இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 108/1 ரன் என வலுவாக இருந்தது. அடுத்து தேநீர் இடைவேளையின் போது 87 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது (215/7).