sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சிட்னியில் ரோகித், கோலி 'ஸ்பெஷல்' * இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

/

சிட்னியில் ரோகித், கோலி 'ஸ்பெஷல்' * இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

சிட்னியில் ரோகித், கோலி 'ஸ்பெஷல்' * இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

சிட்னியில் ரோகித், கோலி 'ஸ்பெஷல்' * இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி


ADDED : அக் 25, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம், கோலி அரைசதம் விளாச, இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 2-1 என வென்று கோப்பை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முக்கியத்துவமில்லாத மூன்றாவது போட்டி நேற்று சிட்னியில் நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ் குமாருக்கு (தொடை பகுதியில் காயம்) பதிலாக 'ஸ்பின்னர்' குல்தீப், பிரசித் கிருஷ்ணா வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ராணா 4 விக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ், டிராவிஸ் வலுவான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 61 சேர்த்த நிலையில், சிராஜ் 'வேகத்தில்' ஹெட் (29) வெளியேறினார். அக்சர் படேல் 'சுழலில்' மார்ஷ் (41) போல்டானார். பின் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, ஆஸ்திரேலிய பேட்டர்கள் தடுமாறினர். ஷார்ட், 30 ரன் எடுத்தார். ஹர்ஷித் ராணா பந்தில் கேரி (24) அவுட்டானார். வாஷிங்டன் வலையில் ரென்ஷா (56) சிக்கினார். கடைசி கட்டத்தில் எல்லிஸ் (16) கைகொடுத்தார். ஹர்ஷித் ஓவரில் கூப்பர் கொனாலி (23), ஹேசல்வுட் (0) அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்.

'ரோ-கோ' விளாசல்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 10 ஓவரில் 68/0 ரன் எடுத்தது. ஹேசல்வுட் 'வேகத்தில்' சுப்மன் (24) வெளியேறினார். கடந்த இரு போட்டியில் தொடர்ந்து 'டக்' அவுட்டான கோலி, இம்முறை ஹேசல்வுட் பந்தில் முதல் ரன் எடுத்ததும் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து ரோகித், கோலி (செல்லமாக ரோ-கோ) சேர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தனர். தங்களுக்கு எதிரான விமர்சனங்களையும் தகர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு 168 ரன் சேர்த்தனர். ஒருநாள் அரங்கில் கோலி, 75வது அரைசதம் எட்டினார். 'ஹிட்மேனாக' ஜொலித்த ரோகித், 33வது சதம் அடித்தார். எல்லிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய 'சேஸ் மாஸ்டர்' விராத் கோலி, சுலப வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 38.3 ஓவரில் ஓவரில் 237/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (121, 13 x4, 3x6)), கோலி (74, 7x4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் (121 ரன்), தொடர் நாயகன் (202) விருதை ரோகித் சர்மா தட்டிச் சென்றார்.

ராசியில்லா 'டாஸ்'

கேப்டனாக நேற்று முதல் ஒருநாள் போட்டியில் வென்றார் சுப்மன் கில். ஆனால், 'டாஸ்' வெல்ல தவறினார். ஒருநாள் அரங்கில் இந்தியா தொடர்ந்து 18வது முறையாக 'டாஸ்' இழந்தது.

ஷ்ரேயஸ் காயம்

இந்திய அணியின் 'பீல்டிங்' நேற்று அருமையாக இருந்தது. வாஷிங்டன் பந்தை (22.3) ஷார்ட் அடிக்க, 'பார்வர்ட் ஸ்கொயர்' திசையில் கோலி துடிப்பாக பிடித்தார். ஹர்ஷித் ராணா பந்தை (33.4) அலெக்ஸ் கேரி அடிக்க, நீண்ட துாரம் ஓடிச் சென்று பிடித்தார் துணை கேப்டன் ஷ்ரேயஸ். அப்போது இவரது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட இவர், களத்தை விட்டு வெளியேறினார். பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார்.



100 'கேட்ச்'

ஒருநாள் அரங்கில் 100 'கேட்ச்' மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரரானார் ரோகித் சர்மா. முதலிடத்தில் கோலி (163 கேட்ச்) உள்ளார்.



8 போட்டி, 16 விக்கெட்

முதல் 8 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் பட்டியலில் மூன்றாவது இடத்தை அஷ்வினுடன் பகிர்ந்து கொண்டார் ஹர்ஷித் ராணா. இருவரும் 8 போட்டிகளில் தலா 16 விக்கெட் வீழ்த்தினார். முதல் இரு இடங்களில் அகார்கர்/பிரசித் கிருஷ்ணா (தலா 19 விக்.,), பும்ரா (17 விக்.,) உள்ளனர்.

இரண்டாவது இடம்

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார் கோலி. 'டாப்-3' வீரர்கள்.

வீரர் போட்டி ரன்

சச்சின் (இந்தியா) 463 18426

கோலி (இந்தியா 305 14255

சங்ககரா (இலங்கை) 404 14234



50வது சதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் எட்டினார் ரோகித் சர்மா. டெஸ்டில் 12, ஒருநாள் போட்டியில் 33, 'டி-20' போட்டியில் 5 சதம் அடித்துள்ளார்.

* ஒரு நாள் அரங்கில் அதிக சதம் அடித்தவரில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் (33). முதல் இரு இடங்களில் இந்தியாவின் கோலி (51), சச்சின் (49) உள்ளனர். நான்காவது இடத்தில் பாண்டிங் (ஆஸி., 30) நீடிக்கிறார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் (9) அடித்த இந்திய வீரர்களில் முதலிடத்தை சச்சினுடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். அடுத்த இடத்தில் கோலி (8 சதம்) உள்ளார்.

* ஒருநாள் அரங்கில் சதம் அடித்த மூத்த இந்திய வீரர் வரிசையில் ரோகித் (38 ஆண்டு, 178 நாள், எதிர், ஆஸி., சிட்னி, 2025) இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் சச்சின் (38 ஆண்டு, 327 நாள், எதிர், வங்கம், 2013) உள்ளார்.

* ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் கங்குலியை (11363) முந்தி, 3வது இடம் பிடித்தார் ரோகித் (11370). முதல் இரு இடத்தில் சச்சின், கோலி உள்ளனர்.

அதிக ரன்

சர்வதேச 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தவரில் முதலிடம் பெற்றார் கோலி (ஒருநாள் போட்டியில் 14,255+ டி-20ல் 4188=18,447). அடுத்த இடங்களில் சச்சின் (18,426+10=18,436), சங்ககரா (இலங்கை, 14,234+1382=15616), ரோகித் சர்மா (11,297+4231=15,528) உள்ளனர்.

நாட்டுப்பற்று

வெற்றி மகிழ்ச்சியில் நேற்று பெவிலியின் திரும்பிய போது இந்திய தேசிய கொடியை மைதானத்தில் பார்த்தார் கோலி. உடனே அதை எடுத்து ரசிகர் ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

'தேங்க்யூ' ஆஸ்திரேலியா

சிட்னியில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி அசத்தினர். இதுவே ஆஸ்திரேலிய மண்ணில் இவர்களது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம்.

ரோகித் சர்மா கூறுகையில்,''சிட்னியில் விளையாடுவது எப்போதும் பிடிக்கும். மீண்டும் இங்கு வந்து விளையாடுவோமா என தெரியவில்லை. 'தேங்க்யூ' ஆஸ்திரேலியா,'' என்றார்.

கோலி கூறுகையில்,''ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அதிக அளவில் திரண்டு வந்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி,''என்றார்.






      Dinamalar
      Follow us