/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பொங்கி எழுமா இந்திய 'பேட்டிங்' * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
/
பொங்கி எழுமா இந்திய 'பேட்டிங்' * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
பொங்கி எழுமா இந்திய 'பேட்டிங்' * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
பொங்கி எழுமா இந்திய 'பேட்டிங்' * இன்று மூன்றாவது 'டி-20' சவால்
ADDED : நவ 12, 2024 11:04 PM

செஞ்சுரியன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்திய பேட்டர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது போட்டி, செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.
கவனம் தேவை
முதல் போட்டியில் சதம் அடித்த கீப்பர் சஞ்சு சாம்சன், அடுத்த சவாலில் 'டக்' அவுட்டானார். இன்று பொறுப்பாக ஆட வேண்டும். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்புகிறார். இவருக்கு பதில் ராமன்தீப் சிங்கை சேர்க்கலாம். சாம்சனுடன், திலக் வர்மாவை துவக்க வீரராக அனுப்பலாம்.
கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் என மூன்று முக்கிய வீரர்களும் தடுமாறுவது பலவீனம். மந்தமாக ஆடும் பாண்ட்யா, கடந்த முறை 45 பந்தில் 39 ரன் எடுத்தார். 28 பந்துக்குப் பின் தான் பவுண்டரி அடித்தார். தற்போதைய இந்திய அணியில், பாண்ட்யாவை தவிர மற்றவர்கள் இம்மைதானத்தில் விளையாடியது இல்லை. இங்கு பந்துகள் அதிகம் பவுன்ஸ் ஆகும். இந்திய பேட்டர்கள் சுதாரித்து விளையாடுவது அவசியம்.
வருண் நம்பிக்கை
சுழலில் வருண் சக்ரவர்த்தி (8 விக்.,), அக்சர் படேல், பிஷ்னோய் அசத்துகின்றனர். 'வேகத்தில்' அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் கூட்டணி, முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. கடந்த முறை ஏமாற்றியது. இன்று யாஷ் தயாள் அல்லது வைஷாக் விஜய் குமாருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.
திணறும் பேட்டிங்
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிளாசன் உள்ளிட்ட நட்சத்திர பேட்டர்கள் சோபிக்காதது பலவீனம். பின் வரிசையில் கோயட்சீ, ஸ்டப்ஸ் துணிச்சலாக ரன் சேர்ப்பது பலம். பந்துவீச்சில் கோயட்சீ, சைம்லேன், யான் சென் மீண்டும் மிரட்டலாம். 'சுழலில்' அசத்த மஹாராஜ் உள்ளார்.