/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலில் இளம் இந்திய அணி * 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில்
/
பைனலில் இளம் இந்திய அணி * 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில்
பைனலில் இளம் இந்திய அணி * 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில்
பைனலில் இளம் இந்திய அணி * 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில்
ADDED : பிப் 04, 2026 11:02 PM

ஹராரே: உலக கோப்பை தொடரின் (19 வயது) பைனலுக்கு 10வது முறையாக முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்ற இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறியது. நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இரண்டு சதம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒஸ்மான் (39), காலித் அகமதுஜாய் (31) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அடுத்து பைசல் ஷினோஜடா, உஜைருல்லா ஜோடி இணைந்தது. இந்திய அணி பீல்டிங் சுமாராக அமைய, இருவரும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். பைசல் சதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 149 ரன் சேர்த்த போது, தீபேஷ் பந்தில் பைசல் (110) போல்டானார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310/4 ரன் குவித்தது. சதம் அடித்த உஜைருல்லா (101), அப்துல் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீபேஷ், கனிஷ்க் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
வைபவ் விளாசல்
கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. ஆரோன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, வைபவ், வேகமாக ரன் சேர்த்தார். ஜத்ரன் வீசிய ஓவரில் (4வது), வைபவ் 4, 4, 6 என விளாச, 15 ரன் கிடைத்தன. மீண்டும் வந்த ஜத்ரன் ஓவரில் (6வது) 4, 6, 4, 4 என வைபன் ரன் மழை பொழிய, 19 ரன் எடுக்கப்பட்டன. அப்துல் வீசிய 7வது ஓவரில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என வைபவ், 18 ரன் எடுத்தார். இவர், 24 பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 9.3 ஓவரில் 90 ரன் எடுத்த போது, வைபவ் (68 ரன், 33 பந்து) அவுட்டானார்.
ஆரோன் கலக்கல்
பின் இணைந்த ஆரோன், கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஜோடி, சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. ஆயுஷ் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது ஆயுஷ் (62) அவுட்டானார். மறுபக்கம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன், சதம் அடித்தார். இவர், 115 ரன்னில் அவுட்டானார்.
இருப்பினும், இந்திய அணி 41.1 ஓவரில் 311/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. விஹான் (38), வேதாந்த் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
சாதனை வெற்றி
உலக 19 வயது உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது இந்திய அணி. நேற்று ஆப்கானிஸ்தான் (310/4) இலக்கைத் துரத்திய இந்தியா, 311/3 ரன் (41.1 ஓவர்) எடுத்து வென்றது.
இதற்கு முன் 2006 தொடரில் நியூசிலாந்து அணி 305/7 ரன் எடுத்து (எதிர்-அயர்லாந்து, 304/9) வென்றதே அதிகமாக இருந்தது.
இங்கிலாந்துடன் மோதல்
ஜிம்பாப்வேயின் ஹராரே, ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2022ல் இந்த இரு அணிகள் மோதிய பைனலில் (ஆன்டிகுவா, வெ.இண்டீஸ்), இந்தியா சாதித்து கோப்பை வென்றது.
10 வது முறை
இந்திய அணி 19 வயது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு 10 வது முறையாக நேற்று முன்னேறியது. இதில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை சாம்பியன் ஆனது.

