ஜொலிக்கும் வைபவ் சூர்யவன்ஷி... * இந்திய அணியில் அறிமுகமாக வாய்ப்பு
ஜொலிக்கும் வைபவ் சூர்யவன்ஷி... * இந்திய அணியில் அறிமுகமாக வாய்ப்பு
ADDED : ஏப் 14, 2026 11:47 PM

புதுடில்லி: இளம் வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணியில் இடம் பெற உள்ளார். அயர்லாந்து தொடரில் அறிமுகமாகலாம்.
பீஹாரின் சமஸ்திபுராவில் பிறந்தவர் வைபவ் சூர்யவன்ஷி, 15. நான்கு வயதில் கிரிக்கெட் பயணத்தை துவக்கினார். பாட்னாவில் உள்ள மணிஷ் ஓஜா கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். வலை பயிற்சியில் தினமும் 600 பந்துகளை சந்தித்து, பேட்டிங் திறமையை பட்டை தீட்டினார்.
'உலக' நாயகன்
பீஹார் அணிக்காக 12 வயதில் வினு மன்கட் டிராபி தொடரில் (19 வயதுக்கு உட்பட்டோர்) பங்கேற்றார். துணிச்சலாக பேட் செய்வது தான் இவரது பலம். 2026ல் ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) பைனலில் 80 பந்தில் 175 ரன் (15x4, 15x6, எதிர், இங்கி.,) எடுத்து, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.
அதிவேக சதம்
உள்ளூர் தொடரிலும் முத்திரை பதித்தார் வைபவ். 2025ல் விஜய் ஹசாரே தொடரில் 36 பந்தில் சதம் (எதிர், அருணாச்சல்) அடித்தார். இதன் காரணமாக, வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் வாய்ப்பு பெற்றார்.
2024ல் 13 வயதில் ராஜஸ்தான் அணிக்காக ரூ. 1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலக, 2025ல் 14 வயதில் (எதிர், லக்னோ) துவக்க வீரராக அறிமுகமானார். தான் சந்தித்த ஷர்துல் தாகூரின் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். குஜராத் அணிக்கு எதிராக அதிவேக சதம் (35 பந்து) அடித்த இந்திய வீரர் என சாதனை படைத்தார்.
தற்போதைய கிரிக்கெட் லீக் தொடரில் பயமறியா பேட்டராக ஜொலிக்கிறார். பும்ரா (மும்பை) வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து புவனேஷ்வர், ஹேசல்வுட் போன்ற உலகின் முன்னணி பவுலர்களை ஒருகை பார்த்தார். இதுவரை 5 போட்டியில் 200 ரன் (18x4, 18x6, ஸ்டிரைக் ரேட் 263.15) குவித்துள்ளார். இவரது திறமைக்கு அங்கீகாரமாக விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க உள்ளார்.
சச்சின் வழியில்
வரும் ஜூனில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி இரு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான 35 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் வைபவ் (15 வயது) பெயர் இடம் பெற்றுள்ளது. இந்திய 'லெவனில்' வாய்ப்பு பெற்றால், இளம் வயதில் அறிமுகமான சச்சின் (16) சாதனையை தகர்க்கலாம்.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''அயர்லாந்து 'விசா' நடைமுறைக்காக 35 பேர் பட்டியலை கேட்டுள்ளோம். வைபவை சேர்க்க தேர்வாளர்கள் தயாராக உள்ளனர். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஜெய்ஸ்வால் என நான்கு துவக்க வீரர்கள் உள்ளனர். வைபவை சேர்க்க வேண்டுமானால், அபிஷேக் அல்லது சுஞ்சுவை நீக்க வேண்டும். அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே தொடரிலும் வைபவ் இடம் பெறலாம்,''என்றார்.
சாதனை நாயகன்
வைபவ் நிகழ்த்திய சில சாதனைகள்.
* யூத் டெஸ்டில் (2024, எதிர்-ஆஸி.,) சதம் அடித்த இளம் வீரர் (13 ஆண்டு, 187 நாள்).
* கிரிக்கெட் லீக் அரங்கில் அதிவேக சதம் அடித்த இந்தியர் வைபவ் (35 பந்து, 2025).
* 'டி-20' அரங்கில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் (14 ஆண்டு, 32 நாள்).
* யூத் ஒருநாள் அரங்கில் இளம் வயதில் (14 ஆண்டு, 100 நாள்) சதம் அடித்தார்.
* சையது முஷ்தாக் தொடரில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் (14 ஆண்டு, 250 நாள்).
* 'லிஸ்ட் ஏ' அரங்கில் அதிவேக 150 ரன் (59 பந்து, 2025) எடுத்தார் வைபவ்.
* 'லிஸ்ட் ஏ' போட்டியில் சதம் அடித்த உலகின் இளம் (14 ஆண்டு, 272 நாள்) வீரர்.
சூர்யகுமார் நீக்கமா
இந்திய 'டி-20' கேப்டன் சூர்யகுமார், இம்முறை கிரிக்கெட் லீக் தொடரில் மும்பைக்காக சோபிக்கவில்லை. வரும் இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் பிரகாசிக்க தவறினால், இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம். 2028ல் ஒலிம்பிக், 'டி-20' உலக கோப்பை நடக்க உள்ளது. அப்போது இவருக்கு 38 வயதாகிவிடும். இதனால் புதிய கேப்டனை கண்டறியும் பணியில் இந்திய தேர்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
