/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அப்போ தோனி...இப்போ கோலி * ரசிகர்கள் செயல் சரியா
/
அப்போ தோனி...இப்போ கோலி * ரசிகர்கள் செயல் சரியா
ADDED : ஜன 12, 2026 11:23 PM

வதோதரா: ''இந்திய வீரர் ஒருவர் வெளியேறும் போது, உள்ளே வரும் எனக்கு ரசிகர்கள் அதிக உற்சாக கோஷம் எழுப்புவது சரியல்ல'' என கோலி தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. குஜராத்தின் வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இதில் துவக்க வீரர் ரோகித் சர்மா, 26 ரன்னில் அவுட்டானதும் கோலி வந்தார். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் அதிக ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது, சென்னை ரசிகர்களை நினைவுபடுத்தியது. முன்னணி வீரர் அவுட்டானாலும் பரவாயில்லை, தோனி களமிறங்க வேண்டுமென விரும்புவர். தோனி வந்ததும், சேப்பாக்கம் அரங்கம் அதிர வரவேற்பு அளிப்பர்.
இது பற்றி கோலி கூறுகையில்,''உண்மையாக சொன்னால், இந்திய வீரர் ஒருவர் அவுட்டாகி வெளியேறும் போது, களத்திற்கு வரும் எனக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளிப்பது சரியாக தோன்றவில்லை. இதே போன்று தோனிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அவர்களது ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவுட்டாகி வெளியேறும் வீரரின் மனநிலையை உணர வேண்டும். இதை அவர் விரும்ப மாட்டார். இவற்றை கடந்து, ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துகிறேன். ரசிகர்களின் முகத்தில் புன்னகையை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.
வதோதரா போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக ஆடினேன். சாதனைகளை பற்றி நினைப்பதில்லை. இந்திய அணியை வெற்றி பெற வைப்பதே இலக்கு. எனது கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், கனவு நனவான உணர்வு ஏற்படுகிறது. எனது விருப்பங்களை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி,''என்றார்.
அம்மாவுக்காக...
வதோதரா ஒருநாள் போட்டியில் 'சேஸ் மாஸ்டர்' என்பதை நிரூபித்த கோலி, 93 ரன் விளாசி, இந்திய வெற்றிக்கு கைகொடுத்தார். சதத்தை நழுவவிட்ட போதும், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்னை (624 இன்னிங்ஸ்) அதிவேகமாக எட்டி சாதனை படைத்தார். ஒருநாள் அரங்கில் 45வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார். இது பற்றி கோலி கூறுகையில்,''ஆட்டநாயகன் விருதுகளை குர்கானில் வசிக்கும் எனது அம்மாவுக்கு அனுப்பிவிடுவேன். அதை பார்த்து பெருமிதம் கொள்வார். விருதுகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்,''என்றார்.
ரசிப்போம்
நியூசிலாந்து 'ஆல்-ரவுண்டர்' கைல் ஜேமிசன் கூறுகையில்,''வதோதராவில் கோலி ஆட்டம் வேற 'லெவல்'. இவரை போன்ற மகத்தான வீரரின் ரன் வேட்டையை கட்டுப்படுத்துவது கடினம். அவரது ஆட்டத்தை ரசிக்கலாம்,''என்றார்.

