ADDED : மே 12, 2026 11:22 PM

புதுடில்லி: ''விராத் கோலி பற்றி அவதுாறு செய்தி பரப்ப, சில ஊடகங்கள் பணம் தர முன்வந்தன,'' என ஜெர்மனி மாடல் லிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 37. இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் 27.4 கோடி பேர் பின்பற்றுகின்றனர். நடப்பு லீக் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். 11 போட்டியில் 379 ரன் எடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், ஜெர்மனியின் 'கன்டென்ட் கிரியேட்டர்' லிஸ் லஸ், என்பவரின் போட்டோவுக்கு, கோலியின் 'இன்ஸ்டாகிராம்' கணக்கில் இருந்து 'லைக்' கொடுக்கப்பட்டு, பின் இது திரும்பப் பெறப்பட்டது. இந்த செயல்பாடு வைரல் ஆன நிலையில், விவாதங்களையும் துாண்டியது.
இந்நிலையில் பெங்களூரு ஜெர்சியுடன் பதிவு வெளியிட்டார் லிஸ் லஸ். இரண்டு நாளுக்கு முன் இவர், மும்பை வந்தார். அப்போது லிஸ் லஸ் கூறியது:
எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கோலி. அவர் மீது மரியாதை உள்ளது. அவரது பதிவை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒரு சிறிய சமூகவலைதள பகிர்வு, இவ்வளவு பெரியளவில் கவனம் ஈர்த்தது வியப்பாக உள்ளது.
இது தேவையற்ற முறையில் பெரிது படுத்தப்பட்டு, கோலியை விமர்சித்து வருகின்றனர். கோலிக்கு எதிராக பேசவும், அவர் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து, குற்றம் சுமத்த வேண்டும் என, பத்திரிகையாளர் சிலர் எனக்கு பணம் தர முன்வந்தனர். இதனால் இந்தியாவில் பிரபலம் அடையலாம் என்றனர். நான் ஏன் பணத்துக்காக, தவறாக பேச வேண்டும். அப்படிப்பட்ட நபர் நான் அல்ல என மறுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
