/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சச்சின் சாதனையை எட்டுவார் கோலி... * பாண்டிங் நம்பிக்கை
/
சச்சின் சாதனையை எட்டுவார் கோலி... * பாண்டிங் நம்பிக்கை
சச்சின் சாதனையை எட்டுவார் கோலி... * பாண்டிங் நம்பிக்கை
சச்சின் சாதனையை எட்டுவார் கோலி... * பாண்டிங் நம்பிக்கை
ADDED : பிப் 25, 2025 11:04 PM

துபாய்: ''ஒருநாள் போட்டியில் கோலியைவிட சிறந்த வீரரை பார்த்ததில்லை. அதிக ரன் எடுத்து, சச்சின் சாதனையை எட்டுவார்,''என பாண்டிங் தெரிவித்தார்.
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சதம் விளாசிய கோலி, இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.
ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் கோலி (299 போட்டி, 14,085 ரன்) மூன்றாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சக வீரர் சச்சின் (463ல் 18,426) நீடிக்கிறார். 2வது, 4வது இடத்தில் முறையே சங்ககரா (இலங்கை, 404ல் 14,234), பாண்டிங் (375ல் 13704) உள்ளனர்.
சங்ககராவை முந்த கோலிக்கு இன்னும் 150 ரன் தேவை. சச்சின் சாதனையை எட்ட 4,341 ரன் தேவை. ஏற்கனவே அதிக சதம் அடித்தவர் பட்டியலில் சச்சினை (49) முந்தி முதலிடம் பெற்றார் கோலி (51). தற்போது 36 வயதாகும் இவர், தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் அதிக ரன் எடுத்து சாதிக்கலாம்.
இது பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியது:
ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலில் என்னை முந்தினார் கோலி. இவருக்கு முன்னதாக தற்போது சச்சின், சங்ககரா மட்டுமே உள்ளனர். அதிக ரன் எடுத்தவராக சாதனை படைக்க நிச்சயம் விரும்புவார். 50 ஓவர் போட்டியில் இவரைவிட சிறந்த வீரரை நான் பார்த்தது இல்லை. உடல் அளவில் 'பிட்' ஆக உள்ளார். மிக நீண்ட காலம் விளையாடியும் சச்சினைவிட 4,341 ரன் பின்தங்கியுள்ளார். இது சச்சினின் திறமையை உணர்த்துகிறது. கோலிக்கு இன்னும் ரன் தாகம் இருக்கும்பட்சத்தில், சச்சினை முந்தி சாதனை படைக்கலாம்.
மீண்டும் ஹீரோ
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடுவார் கோலி. 2022ல் 'டி-20' உலக கோப்பையில் 82 ரன் எடுத்து அசத்தினார். சாம்பியன்ஸ் டிராபியிலும் கைகொடுத்துள்ளார். துபாய் ஆடுகளத்தில் 'டாப்-ஆர்டர்' பேட்டர் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் வெற்றி வசப்படும் நிலை இருந்தது. இந்த சூழலில் மீண்டும் கோலி மிரட்டினார். 'சாம்பியன்' வீரர் என்பதை நிரூபித்தார். 50 ஓவர் போட்டியில் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். இவரது சதம் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளின் 'ஸ்கோர் கார்டை' பார்த்தால், கோலியின் 100 ரன் தனித்துவமாக தெரியும்.
ஏமாற்றிய இருவர்
பொதுவாக 50 ஓவர் போட்டியில் வலுவான ஸ்கோர் எடுப்பது அவசியம். ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட பெரிய ஸ்கோரை எட்டவில்லை. சிறந்த 'பார்ட்னர்ஷிப்பும்' அமைக்கவில்லை. அனுபவ பாபர் ஆசம், கேப்டன் ரிஸ்வான் சோபிக்க தவறினர். முதல் இரு போட்டிகளில் இவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
'சேஸ் மாஸ்டர்'
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறுகையில்,''50 ஓவர் கிரிக்கெட்டில் 'சேஸ்' செய்வதில் சிறந்த வீரராக திகழ்கிறார் கோலி. அதிவேகமாக 14,000 ரன் எட்டியது, 51 சதம் விளாசியது என ஒருநாள் அரங்கில் பல சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தினார். இவரது சாதனை புள்ளி விபரங்கள் வியக்க வைக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதால், போட்டி ஒருதலைபட்சமாக மாறியது. பாகிஸ்தான் பேட்டிங் பலவீனமாக இருந்தது,''என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில்,''ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அனைத்து காலத்துக்கும் சிறந்த வீரராக ஜொலிக்கிறார் கோலி,''என்றார்.
இந்திய 'பி' அணியை
பாக்., வெல்வது கடினம்
ஐ.சி.சி., தொடர்களில் பாகிஸ்தான் சொதப்புகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''தற்போதைய நிலையில் இந்திய 'பி' அணியை கூட பாகிஸ்தான் வீழ்த்துவது கடினம். பாகிஸ்தான் வீரர்களிடம் ஆட்ட நுணுக்கம் இல்லாத போதும், இயற்கையான திறமை உண்டு. இன்சமாம்-உல்-ஹக் போன்றவர்களின் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். பாகிஸ்தான் சூப்பர் லீக் மூலம் தரமான இளம் வீரர்களை கண்டறிய முடியவில்லை. அதே நேரம் இந்தியாவில் இளம் வீரர்கள் உருவாக ஐ.பி.எல்., காரணமாக உள்ளது. ரஞ்சி போட்டியில் திறமை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடிக்கின்றனர். சிறந்த இளம் வீரர்களை கண்டறிய முடியாதது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்,''என்றார்.
தோனி இருந்தால் கூட...
பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கூறுகையில்,''சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சூழ்நிலைக்கு ஏற்ப பாகிஸ்தன் அணி தேர்வு செய்யப்படவில்லை. தோனி அல்லது யூனிஸ் கானை கேப்டனாக நியமித்திருந்தால் கூட, இந்த அணியை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.
துபாயில் சில போட்டிகள் நடக்கும் நிலையில், இரண்டு 'பார்ட் டைம் ஸ்பின்னர்'களை தேர்வு செய்தனர். ஒருநாள் போட்டியில் அனுபவம் இல்லாதவர் அப்ரார் அகமது. சமீபத்திய தென் ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதிரடியாக ஆடும் இர்பான் நியாசி, சிறந்த பீல்டர். இவரை தேர்வு செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிரான தோல்வி பற்றி விமர்சிக்கின்றனர். என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை அறிவித்த போதே, சாம்பியன்ஸ் டிராபியை இழந்து விட்டோம்,'' என்றார்.