/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அதிவேக இரட்டை சதம் * நியூசி., வீரர் சாதனை
/
அதிவேக இரட்டை சதம் * நியூசி., வீரர் சாதனை
ADDED : அக் 23, 2024 11:00 PM

கிறைஸ்ட்சர்ச்: 'லிஸ்ட் ஏ' போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதித்தார் நியூசிலாந்தின் சாத் போவெஸ்.
நியூசிலாந்தில் போர்டு டிராபிக்கான 'லிஸ்ட் ஏ' (50 ஓவர்) தொடர் நடக்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் கான்டர்பெர்ரி, ஒடாகோ அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கான்டர்பெர்ரி அணிக்கு சாத் போவெஸ், நிக்கோல்ஸ் (0) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் மெக்கான்சியே 27 ரன் எடுத்தார். மறுபக்கம் ரன் மழை பொழிந்தார் போவெஸ்.
53 வது பந்தில் சதம் கடந்த போவெஸ், 103 வது பந்தில் இரட்டை சதம் எட்டினார். இது 'லிஸ்ட் ஏ' போட்டியில் அதிவேக இரட்டை சதம் ஆனது. இவர் 110 பந்தில் 205 ரன் எடுத்து அவுட்டானார். கான்டர்பெர்ரி அணி, 50 ஓவரில் 343/9 ரன் குவித்தது. பின் களமிறங்கிய ஒடாகோ அணி 24.5 ஓவரில் 103 ரன்னுக்கு சுருண்டது. கான்டர்பெர்ரி அணி 240 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலிடம்
'லிஸ்ட் ஏ' போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் சாத் போவெஸ் 32. இவர் 103 பந்தில் 200 ரன்னை எட்டினார். முன்னதாக இந்தியாவின் ஜெகதீசன் (தமிழகம், விஜய் ஹசாரே டிராபி, 2022), ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (2021, மார்ஷ் கோப்பை) தலா 114 பந்தில் இரட்டை சதம் அடித்தது சாதனையாக இருந்தது.

