ADDED : நவ 04, 2025 10:51 PM

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் உலக கோப்பை அரையிறுதி, பைனலில் சதம் அடித்த தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட், 814 புள்ளியுடன், இரண்டு இடம் முன்னேறி, முதலிடம் பிடித்தார்.
17 புள்ளியை இழந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (811) இரண்டாவது இடம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே (738) 3வது இடத்தில் உள்ளார். 9 இடம் முன்னேறிய இந்தியாவின் ஜெமிமா (658), 'டாப்-10' பட்டியலில் இடம் (10 வது) பிடித்தார்.
உலக கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (634), தீப்தி (597) 14, 21வது இடத்துக்கு முன்னேறினர்.
பைனலில் 5 விக்கெட் சாய்த்து, உலக கோப்பை தொடரில் மொத்தம் 22 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் தீப்தி (657), பவுலர் தரவரிசையில் 5வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (747) முதலிடத்தில் நீடிக்கிறார்.
கனவு அணி
ஐ.சி.சி., சார்பில் பெண்கள் உலக கோப்பை கனவு அணி வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு இடமில்லை. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி சர்மா என மூவர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

