ADDED : நவ 13, 2025 10:46 PM

தோஹா: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை 'டி-20' தொடர் 2013 முதல் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று கத்தாரில் தோஹாவில் துவங்குகிறது. போட்டிகள், 'தி வெஸ்ட் என்டு பார்க்' மைதானத்தில் நடக்கின்றன.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23ல் நடக்கும்.
ஜிதேஷ் கேப்டன்
இந்திய அணி முதல் சீசனில் (2013) கோப்பை வென்றது. இதன் பின் 2018, 2023ல் பைனலுக்கு முன்னேறியது. இம்முறை 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா, அஷுதோஷ், ராமன்தீப் சிங், தமிழகத்தின் குர்ஜப்னீத் சிங் உள்ளிட்ட வீரர்கள் அசத்தினால், இரண்டாவது கோப்பை வெல்லலாம். இன்று தனது முதல் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

