
புதுடில்லி: இந்திய அணி வீரர் சாய் சுதர்சன் 24. தமிழகத்தை சேர்ந்த இவர், 6 டெஸ்ட் (302 ரன்), 3 ஒருநாள் (127), ஒரு 'டி-20'ல் பங்கேற்றுள்ளார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக விளையாடினார். ஆமதாபாத்தில் நடந்த மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச. 29ல் பெங்களூரு, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அளித்த அறிக்கையில்,' வலது விலா பகுதியில் ஏழாவது எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடர் துவங்கும் முன், ஏற்கனவே பயிற்சியின் போது ஏற்பட்ட அதே இடத்தில் மறுபடியும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,'காயமடைந்த விலா எலும்பிற்கு தகுந்த பாதுகாப்புடன், உடலின் கீழ் பகுதிகளுக்கு மட்டும் தேவையான பயிற்சியில் சாய் சுதர்சன் ஈடுபட்டுள்ளார். அடுத்த 7 முதல் 10 நாளுக்குப் பின் காயத்தின் தன்மை குறைந்தவுடன் மற்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக விலா எலும்பு முறிவு குணமடைய 6 முதல் 7 வாரம் தேவைப்படும் என்பதால், இதன் பிறகு தான், சாய் சுதர்சன் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

