/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவுக்கு இனிக்குமா ஈடன்... * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
/
இந்தியாவுக்கு இனிக்குமா ஈடன்... * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
இந்தியாவுக்கு இனிக்குமா ஈடன்... * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
இந்தியாவுக்கு இனிக்குமா ஈடன்... * முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
ADDED : நவ 13, 2025 11:06 PM

கோல்கட்டா: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் (மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கோப்பை) பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி, சொந்தமண்ணில் முதன் முறையாக இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.
தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் 'டிரா' (2-2) செய்து அசத்திய சுப்மன் கில், மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு இளம் ஜெய்ஸ்வால், அனுபவ லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரவுள்ளது. 3வது வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன் வருகிறார். இதுவரை 5 டெஸ்டில், 9 இன்னிங்சில் 273 ரன் மட்டும் எடுத்துள்ளார். ஒரு சதமும் அடிக்கவில்லை. இத்தொடர் இவருக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும்.
'மிடில் ஆர்டரில்' கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் துருவ் ஜுரெல் (140, 56, 125, 44, 132, 127) ரன் சேர்க்கும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி தரலாம்.
இரண்டு 'வேகம்'
பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணியில் பும்ராவுடன், முகமது சிராஜ் அல்லது உள்ளூர் வீரர் ஆகாஷ் தீப் சேர்க்கப்படலாம்.
சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 'சீனியர்' ஜடேஜா, அக்சர் படேல் என மூவர் கூட்டணிக்கு வாய்ப்பு தரப்படும். இவர்கள் 'ஆல் ரவுண்டர்களாக' இருப்பது, இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இதனால் குல்தீப் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் தான்.
'சுழல்' பலம்
டெஸ்ட் உலகின் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா. கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியது பலம். மார்க்ரம், ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் தர, ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி, விக்கெட் கீப்பர் வேர்ரேன், என பலர் பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர். பவுமா வருகையால், விளாசல் வீரர் டிவால்டு பிரவிஸ் இடம் பறிபோகலாம்.
வழக்கமாக தென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும். சமீபகாலமாக கேஷவ் மஹாராஜ், தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்விகமாக கொண்ட சேனுரன், சைமன் ஹார்மர் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் எதிரணிகளை மிரட்டி வருகிறது. சமீபத்திய 2 டெஸ்டில் இவர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய மண்ணிலும் நெருக்கடி தர முயற்சிக்கலாம். வேகத்தில் ரபாடா, யான் சென் உள்ளனர்.
பந்து சுழலுமா
ஈடன் கார்டன் ஆடுகளத்தில் கடந்த 15 ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 159 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 97 விக்கெட் (61 சதவீதம்) சாய்த்துள்ளனர்.
இம்முறை ஆடுகளத்தில் லேசான புற்கள் காணப்படுகின்றன. அடுத்தடுத்த நாளில் அதிக விரிசல் ஏற்படாது. முதல் 2 நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். காலை, மாலையில் நன்றாக பந்து 'சுவிங்' ஆகும்.
மழை வருமா
கோல்கட்டாவில் இன்று முதல் அடுத்த ஐந்து நாளில் வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.
யார் ஆதிக்கம்
இரு அணிகள் 44 டெஸ்டில் மோதின. இந்தியா 16, தென் ஆப்ரிக்கா 18ல் வென்றன. 10 போட்டி 'டிரா' ஆகின.
* ஈடன் கார்டனில் இரு அணிகள் மோதிய 3 டெஸ்டில் இந்தியா 2, தென் ஆப்ரிக்கா 1ல் வென்றன.
* 2000க்குப் பின் இங்கு இந்தியா விளையாடிய 12 டெஸ்டில் 8ல் வென்றது. 3 'டிரா' ஆகின. 1ல் தோற்றது (2010, இங்கிலாந்து).
காத்திருக்கும் சாதனை
இந்திய அணியின் ஜடேஜா, இதுவரை 87 டெஸ்டில் 338 விக்கெட் வீழ்த்தி, 3990 ரன் எடுத்துள்ளார். இன்னும் 10 ரன் எடுக்கும் பட்சத்தில் டெஸ்டில் 300 விக்கெட், 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய, நான்காவது 'ஆல் ரவுண்டர்' ஆகலாம். முதல் 3 இடத்தில் இந்தியாவின் கபில் தேவ் (5248 ரன், 434 விக்.,), இங்கிலாந்தின் இயான் போத்தம் (5200, 383), நியூசிலாந்தின் வெட்டோரி (4531, 362) உள்ளனர்.

