/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பயிற்சியில் புதுமை...இந்திய வீரர்கள் திறமை * இரண்டாவது போட்டிக்கு தயார்
/
பயிற்சியில் புதுமை...இந்திய வீரர்கள் திறமை * இரண்டாவது போட்டிக்கு தயார்
பயிற்சியில் புதுமை...இந்திய வீரர்கள் திறமை * இரண்டாவது போட்டிக்கு தயார்
பயிற்சியில் புதுமை...இந்திய வீரர்கள் திறமை * இரண்டாவது போட்டிக்கு தயார்
ADDED : நவ 18, 2025 11:16 PM

கோல்கட்டா: கவுகாத்தி டெஸ்டில் சாதிக்க, இந்திய வீரர்கள் புதுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். சாய் சுதர்சன், துருவ் ஜுரல் ஒரு காலில் மட்டும் 'பேடு' அணிந்து களமிறங்கினர். இரு கைகளிலும் பந்தை சுழற்றி அசத்தினார் உள்ளூர் வீரர் கவுஷிக் மெய்டி.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோற்றது. இப்போட்டிக்கு 'சுழலுக்கு' சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்திய பேட்டர்கள் சுழற்பந்துவீச்சில் தடுமாறினர். தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர் 8 விக்கெட் வீழ்த்தி, இந்திய தோல்விக்கு வித்திட்டார்.
ஒரு காலில் 'பேடு'
அடுத்து அசாமின் கவுகாத்தியில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்டில் (நவ.22-25) 'சுழலை' சமாளிக்க, இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் மூன்று மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒரு காலில் மட்டும் 'பேடு' அணிந்து 'ரிஸ்க்' எடுத்தனர். இது பழைய பயிற்சி முறை தான். சிலர் 'பேடு' மூலம் தடுப்பாட்டம் ஆடுவர். அப்போது எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக வாய்ப்பு உண்டு. 'பிரன்ட் பேடு' இல்லாமல் ஆடினால், 'பேட்' மூலம் மட்டுமே 'ஸ்பின்னர்'களின் பந்தை தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 'கிரீசை' விட்டு இறங்கி வந்து ஸ்பின்னர்களை விளாசவும் கைகொடுக்கும். வீரர்களின் 'புட்வொர்க்' மேம்படும். இம்முறையில் கவனமாக பயிற்சி செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், முழங்கால்-கணுக்கால் வரையிலான பகுதியில் பந்து தாக்கி எலும்பு முறிவு ஏற்படலாம். இடது கை பேட்டரான சாய் சுதர்சன் வலது காலில் பாதுகாப்புக்கான 'பேடு' அணியாமல் பயிற்சி செய்தார். வலது கை பேட்டரான துருவ் ஜுரலும் வலது காலில் 'பேடு' இல்லாமல் 'ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்' அடித்து பயிற்சி செய்தார்.
சாய் சுதர்சன் பேட்டிங்கை பயிற்சியாளர் காம்பிர் உன்னிப்பாக கண்காணித்தார். ஆகாஷ்தீப் உள்ளிட்ட 'வேகங்களை' சமாளிக்க முடியாமல் சுதர்சன் தடுமாறினார். இவருக்கு காம்பிர், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உரிய ஆலோசனை வழங்கினர். ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட 6 வீரர்கள் மட்டுமே வலை பயிற்சியில் கலந்து கொண்டனர்.
கவுஷிக் பெருமிதம்
மேற்குவங்கத்தை சேர்ந்த 'ஸ்பின்னர்' கவுஷிக் மெய்டி. வலது, இடது என இரு கைகளிலும் பந்துவீசும் திறன் பெற்றவர். நேற்றைய வலை பயிற்சியில் பங்கேற்றார். கவுஷிக் கூறுகையில்,'' இடது கை பேட்டரான ரவிந்திர ஜடேஜா, சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தருக்கு வலது கையில் பந்துவீசினேன். வலது கை பேட்டரான துருவ் ஜுரலுக்கு இடது கையில் பந்துவீசினேன். ஜடேஜாவுக்கு பந்துவீசிய தருணத்தில் எனது கனவு நனவானது. எனது பந்துவீச்சில் செய்ய வேண்டிய மாற்றங்கள், எந்த அளவில் வீச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்,''என்றார்.
யாருக்கு வாய்ப்பு
கழுத்து பகுதி காயத்தால் அவதிப்படுகிறார் இந்திய கேப்டன் சுப்மன் கில். இரண்டாவது டெஸ்டில் இடம் பெறாத பட்சத்தில், உடற்தகுதி பெற, பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி அகாடமிக்கு செல்வார். இவர் விமானத்தில் பயணம் செய்வதில் பிரச்னை இல்லை. இவருக்கு பதிலாக இடது கை பேட்டர்களான சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் இடம் பெறலாம். ஆனால், கோல்கட்டா டெஸ்டில் தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர் வீழ்த்திய 8 விக்கெட்டில் 6 பேர் இடது கை பேட்டர்கள். இதை சமாளிக்க வலது கை பேட்டரான 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். உள்ளூர் தொடர்களில் அசத்திய ரஜத் படிதர், ருதுராஜ், சர்பராஸ் கான், கருண் நாயர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
ஆதரவு
''பயிற்சியாளர் காம்பிர் சொன்னது சரிதான். கோல்கட்டா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் 124 ரன் 'சேஸ்' செய்யக்கூடிய இலக்கு தான். தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர் வீசிய பந்துகளில் ஒரு சில மட்டுமே சுழன்றன. நமது வீரர்களின் மோசமான ஆட்ட நுணுக்கம், அணுகுமுறையே தோல்விக்கு காரணம். உள்ளூர் போட்டியை பெரும்பாலானவர்கள் புறக்கணிக்கின்றனர். ரஞ்சியில் பங்கேற்றால், உள்ளூர் ஆடுகளத்தின் தன்மை அறியலாம். இந்திய வீரர்கள், தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடினார்.
-கவாஸ்கர்
இந்திய முன்னாள் கேப்டன்
எதிர்ப்பு
''கோல்கட்டா ஆடுகளத்தில் 'பேட்' செய்வதில் பிரச்னை இல்லை என்றார் காம்பிர். உண்மையில் பயங்கரமான ஆடுகளம். டெஸ்ட் போட்டிக்கு ஏற்றது அல்ல. மோசமாக அமைக்கப்பட்டிருந்தது. இரு அணிகளின் ஸ்கோரை (159, 189, 153, 93) பார்த்தாலே, ஆடுகளத்தில் தவறு இருக்கிறது என்பது புரியும். பந்துகளின் 'வேகம்', 'சுழலை' கணிக்க முடியாததால், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. முதல் நாளில் பும்ரா வீசிய பந்து மார்க்ரம் தலைக்கு மேல் சென்றது. 'ஸ்பின்னர்கள்' வீசிய பந்துகளும் வித்தியாசமாக சுழன்றன. இந்த களத்தில் 'ஸ்டம்ப்-டூ-ஸ்டம்ப்' அளவில் பந்துவீசியிருந்தால், நான் கூட விக்கெட் வீழ்த்தியிருப்பேன்.
-ஸ்ரீகாந்த்
இந்திய முன்னாள் கேப்டன்

