/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை பிடியில் நியூசி., * 88 ரன்னுக்கு சுருண்டது
/
இலங்கை பிடியில் நியூசி., * 88 ரன்னுக்கு சுருண்டது
ADDED : செப் 28, 2024 11:09 PM

காலே: இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட் முதல் இன்னிங்சில் 88 ரன்னுக்கு சுருண்டது நியூசிலாந்து. தோல்வியை தவிர்க்க போராடுகிறது.
இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 602/5 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 22/2 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் (6) அவுட்டாகாமல் இருந்தார்.
பிரபாத் 'ஆறு'
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, சுழலில் மிரட்டினார். வில்லியம்சன் (7), மிட்செல் (13), பிளன்டெல் (1), பிலிப்ஸ் (0), கேப்டன் டிம் சவுத்தீ (2) என வரிசையாக பிரபாத்திடம் 'சரண்' அடைந்தனர். சான்ட்னர் அதிகபட்சம் 29 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88 ரன்னுக்கு சுருண்டது. பிரபாத் 6, நிஷான் பெரிஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.
'பாலோ ஆன்'
முதல் இன்னிங்சில் 514 ரன் பின் தங்கிய நியூசிலாந்தை, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடுமாறு ('பாலோ ஆன்') பணித்தது இலங்கை. இந்த சோகத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு லதாம் 'டக்' அவுட்டாக, கான்வே (62), வில்லியம்சன் (46) வேகமாக ரன் சேர்த்து உதவினர். ரச்சின் ரவிந்திரா (12), மிட்செல் (1) ஏமாற்றினர்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 199/5 ரன் எடுத்து, 315 ரன் பின்தங்கி இருந்தது. கைவசம் 5 விக்கெட் மட்டும் மீதமுள்ளதால், நியூசிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது.
514 ரன்
டெஸ்டில் முதல் இன்னிங்சில் அதிக ரன் முன்னிலை பெற்ற அணி வரிசையில், இலங்கை 5வது இடம் பெற்றது. காலே டெஸ்டில் 514 ரன் (எதிர்-நியூசி.,) முன்னிலை பெற்றுள்ளது.
* இந்த வரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. 1938ல் நடந்த ஓவல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 702 ரன் முன்னிலை பெற்றது.
5 'கேட்ச்'
டெஸ்ட் அரங்கில் ஒரே பவுலரின் பந்துவீச்சில், 5 முறை 'கேட்ச்' செய்த ஐந்தாவது வீரர் ஆனார் இலங்கையின் தனஞ்செயா டி சில்வா (பிரபாத் பவுலிங்கில்). முன்னதாக இங்கிலாந்தின் பாப் டெய்லர் (1980, இந்தியா), தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (1998, இங்கிலாந்து), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (2004, இலங்கை), இலங்கையின் திரிமான்னே (2021, இங்கிலாந்து) இதுபோல அசத்தினர்.