ADDED : டிச 13, 2024 11:20 PM

பெங்களூரு: சையது முஷ்தாக் அலி டிராபி தொடர் பைனலுக்கு முன்னேறியது மும்பை. அரையிறுதியில் பரோடாவை வீழ்த்தியது.
இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. நேற்று அரையிறுதி போட்டி நடந்தன. பெங்களூருவில் நடந்த போட்டியில் மும்பை, பரோடா மோதின. 'டாஸ்' வென்ற மும்பை, பீல்டிங் தேர்வு செய்தது.
பரோடா அணிக்கு ஷாஷ்வத் (33), அபிமன்யுசிங் (9) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் குர்னால் பாண்ட்யா 30 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (5) ஏமாற்றினார். ஆதித் (22) உதவ, பரோடா அணி 20 ஓவரில் 158/7 ரன் மட்டும் எடுத்தது. ஷிவாலிக் (36) அவுட்டாகாமல் இருந்தார்.
ரகானே அபாரம்
மும்பை அணிக்கு பிரித்வி ஷா (8), ரகானே ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் 46 ரன்னில் அவுட்டானார். பவுண்டரி மழை பொழிந்த ரகானே, அரைசதம் விளாசினார். 56 பந்தில் 98 ரன் எடுத்த ரகானே, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்பினார். மும்பை அணி 17.2 ஓவரில் 164/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
ரஜத் கலக்கல்
இரண்டாவது அரையிறுதியில் டில்லி, மத்திய பிரதேசம் மோதின. முதலில் களமிறங்கிய டில்லி அணி, 20 ஓவரில் 146/5 ரன் மட்டும் எடுத்தது. மத்திய பிரதேச அணிக்கு ரஜத் படிதர் (66 ரன், 29 பந்து) கைகொடுக்க, 15.4 ஓவரில் 152/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில் (பெங்களூரு), மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோத உள்ளன.