'சூப்பர்-7', 'சூப்பர்-10' அறிமுகம் * உலக கோப்பை கிரிக்கெட்டில் புதுமை
'சூப்பர்-7', 'சூப்பர்-10' அறிமுகம் * உலக கோப்பை கிரிக்கெட்டில் புதுமை
ADDED : ஜூலை 15, 2026 11:24 PM

துபாய்: வரும் ஒருநாள், 'டி-20' உலக கோப்பை தொடரில் 'சூப்பர்-7', 'சூப்பர்-10' சுற்று அறிமுகம் செய்யப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள், 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. வரும் 2027 ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள, ஒருநாள் உலக கோப்பை தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 14 அணிகள் பங்கேற்கும். தரவரிசையில் கடைசி 3 இடத்தில் உள்ள அணிகள் (12, 13, 14வது) மட்டும் தகுதிச்சுற்றில் மோதும்.
இதில் 2, 3வது இடம் பெறும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும். முதலிடம் பெறும் அணி பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.
* பிரதான சுற்றில், 12 அணிகள் தலா 6 என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
* ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடம் பெறும் 6 அணிகள், இரு பிரிவிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்ட 1 அணி என, 7 அணிகள் 'சூப்பர்-7' சுற்றுக்கு முன்னேறும். இதில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
'சூப்பர்-10' சுற்று
'டி-20' உலக கோப்பை 11 சீசன் வரும் 2028, அக். 21-நவ. 19 வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்க உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் ஐ.சி.சி., பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளது.
இதன் படி, 20 அணிகள், தலா 4 என, 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 அணி என, மொத்தம்10 அணிகள் 'சூப்பர்-10' சுற்றுக்கு முன்னேறும்.
* இந்த 10 அணிகள் தலா 5 என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
* ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
* இரண்டு பிரிவிலும் 2, 3 வது இடம் பெறும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் மோதும். இதனால் 3வது இடம் பெறும் அணிக்கும், அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.
* இதில் வெல்லும் 2 அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறும்.
எனினும் மொத்தம் 55 போட்டிகள் என்பதில் மாற்றம் இல்லை.
