ADDED : ஜூலை 16, 2026 10:59 PM

காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் 'யூத்' டெஸ்ட் 'டிரா' ஆனது.
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்டில் விளையாடுகிறது. முதல் போட்டி காலேயில் நடந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 424/9 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்திருந்தது. லக்சயா (196), குஷ் படேல் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய லக்சயா ராய்சந்தனி (207 ரன், 3X6, 22X4) இரட்டை சதம் விளாசினார். குஷ் படேல் (42) ஓரளவு கைகொடுத்தார். மறுமுனையில் அசத்திய மானவ் கிருஷ்ணா (100), தன்பங்கிற்கு சதம் விளாசினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 576 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பின், 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு துல்னித் சிகேரா (72), கவிஜா கமகே (51) கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 178/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது டெஸ்ட், ஜூலை 20ல் கொழும்புவில் துவங்குகிறது.
