ADDED : பிப் 18, 2025 11:21 PM

அல் அமராத்: ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் லீக்-2 தொடர் தற்போது நடக்கிறது. மஸ்கட்டில் நடந்த போட்டியில் அமெரிக்கா, ஓமன் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன், பீல்டிங் தேர்வு செய்தது.
அமெரிக்க அணிக்கு ஆன்ட்ரியஸ் (14), ஹர்மீத் சிங் (10), ஆரோன் (16), சஞ்சய் (16) ஏமாற்றினர். அமெரிக்க அணி 35.3 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிலிந்த் குமார் (47) அவுட்டாகாமல் இருந்தார். ஓமன் வீரர் ஷகீல் அகமது 3 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய ஓமன் அணிக்கு ஹம்மத் மிர்சா அதிகபட்சம் 29 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஓமன் அணி 25.3 ஓவரில் 65 ரன்னுக்கு சுருண்டது. அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக சாதனை
ஒருநாள் அரங்கில் முதலில் களமிறங்கிய அணி குறைந்த ஸ்கோர் (122) எடுத்து வெற்றி பெற்றது முதன் முறையாக நேற்று நடந்தது. இது புதிய உலக சாதனை ஆனது. இதற்கு முன் 1985ல் சார்ஜாவில் நடந்த போட்டியில் முதலில் இந்திய அணி 125 ரன் எடுத்தது. பின் பாகிஸ்தானை 87 ரன்னுக்கு சுருட்டி வெற்றி பெற்றிருந்தது.

