/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
133 ரன் விளாசிய பாண்ட்யா * மும்பை அணிக்கு முதல் தோல்வி
/
133 ரன் விளாசிய பாண்ட்யா * மும்பை அணிக்கு முதல் தோல்வி
133 ரன் விளாசிய பாண்ட்யா * மும்பை அணிக்கு முதல் தோல்வி
133 ரன் விளாசிய பாண்ட்யா * மும்பை அணிக்கு முதல் தோல்வி
ADDED : ஜன 03, 2026 11:02 PM

ராஜ்கோட்: விஜய் ஹசாரே போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 92 பந்தில் 133 ரன் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள், லீக் முறையில் நடக்கின்றன. நேற்று ஐந்தாவது சுற்று போட்டிகள் நடந்தன. ராஜ்கோட்டில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் பரோடா, விதர்பா அணிகள் மோதின.
பரோடா அணிக்கு ஹர்திக் பாண்ட்யா ரன் மழை பொழிந்தார். 39 வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர், 1 பவுண்டரி அடித்து, 'லிஸ்ட் ஏ' அரங்கில் முதல் சதம் கடந்தார். இவர், 92 பந்தில் 133 ரன் விளாசினார். பரோடா அணி 50 ஓவரில் 293/9 ரன் எடுத்தது.
விதர்பா அணிக்கு அதர்வா (65), அமன் மோ ஹடே (150*), துருவ் ஷோரே (65*) கைகொடுக்க, 41.4 ஓவரில் 296/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
மும்பை தோல்வி
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் (சி) முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366/4 ரன் குவித்தது. பிரித்வி ஷா 71, அர்ஷின் 114, ருதுராஜ் 66 ரன் எடுத்தனர். மும்பை அணியை ஜெய்ஸ்வால் (3) கைவிட்டார். ரகுவன்ஷி (92), சித்தேஷ் (52) போராடிய போதும், 42 ஓவரில் 238 ரன்னில் ஆல் அவுட்டாகி, இத்தொடரில் முதன்முறையாக தோற்றது (128 ரன் வித்தியாசம்).
சபாஷ் சாம்சன்
மற்றொரு போட்டியில் ஜார்க்கண்ட் (311/7) இலக்கைத் துரத்திய கேரளா அணிக்கு சாம்சன் (101), கேப்டன் ரோஹன் (124) சதம் உதவ, 42.3 ஓவரில் 313/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
* புதுச்சேரி அணி (229/6), மத்திய பிரதேசத்தை (228/10) 4 விக்கெட்டில் வென்றது.
* குஜராத் அணி (318/9), 7 ரன்னில் ஆந்திராவை (311/7) வீழ்த்தியது. சதம் அடித்த குஜராத் வீரர் அக்சர் படேல் (130) ஆட்டநாயகன் ஆனார்.
தமிழகம் ஏமாற்றம்
ஆமதாபாத்தில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6, 7வது இடத்தில் இருந்த தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 46.5 ஓவரில் 225 ரன்னில் ஆல் அவுட்டானது. வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட் சாய்த்தார்.
தமிழக அணிக்கு ரதிஷ் (54), கேப்டன் ஜெகதீசன் (52 பந்து, 71 ரன்) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. 16.1 ஓவரில் 121 ரன் சேர்த்தது. இதன் பின் வரிசையாக விக்கெட் சரிந்தது. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (36) அவுட்டாக, 41.4 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட்டானது. 10 ரன்னில் தோற்றது. இத்தொடரில், தமிழக அணி தொடர்ந்து அடைந்த நான்காவது தோல்வி இது.
சுப்மன் விலகல்
நியூசிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், விஜய் ஹசாரே டிராபி தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் முதல் நாள் எடுத்துக் கொண்ட உணவு காரணமாக, ஏற்பட்ட பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் நேற்று சிக்கிமிற்கு எதிராக களமிறங்கவில்லை. அடுத்து கோவாவுக்கு எதிராக (ஜன. 6) விளையாட உள்ளார்.
* இருப்பினும் சிக்கிமை (22.2 ஓவரில் 75/10), பஞ்சாப் அணி (6.2 ஓவர், 81/0), 10 விக்கெட்டில் சாய்த்தது. அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட் சாய்த்தார்.
படிக்கல் கலக்கல்
கர்நாடகம், திரிபுரா அணிகள் மோதிய போட்டி ஆமதாபாத்தில் ('ஏ') நடந்தது. கர்நாடக அணிக்கு தேவ்தத் படிக்கல் (108) மீண்டும் சதம் அடித்தார். இத்தொடரில், கடந்த 5 போட்டியில் இவர் அடித்த 4வது சதம் (147, 124, 22, 113, 108) ஆனது. கர்நாடக அணி 50 ஓவரில் 332/7 ரன் குவித்தது. திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்னில் ஆல் அவுட்டாகி, 80 ரன்னில் தோற்றது.
கோலியை முந்தினார்
'லிஸ்ட் ஏ' அரங்கில் குறைந்தது 50 போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களில், அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர்களில் கோலியை (344ல் 16,207 ரன், 57.67) முந்தி, முதலிடம் பெற்றார் ருதுராஜ். 97 போட்டியில் 4,904 ரன் எடுத்த இவரது சராசரி 57.69 ஆக உள்ளது.

