சுப்மன் கில் 'துணைக்கு' ராகுல்: வெ.இண்டீஸ் ஒருநாள் தொடரில்...
சுப்மன் கில் 'துணைக்கு' ராகுல்: வெ.இண்டீஸ் ஒருநாள் தொடரில்...
ADDED : செப் 13, 2026 11:38 PM

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நீடிப்பார். துணை கேப்டனாக ராகுல் நியமிக்கப்படலாம். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல் இடையே போட்டி நிலவுகிறது.
இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள், திருவனந்தபுரம் (செப்.27), கவுஹாத்தி (செப்.30), முல்லன்புரில் (அக்.3) நடக்க உள்ளன. மறுபக்கம் உள்ளூர் இரானி கோப்பை போட்டியில் (அக்.1-5, ஸ்ரீநகர்) ரஞ்சி கோப்பை சாம்பியன் ஜம்மு-காஷ்மீர், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோத உள்ளன. இதற்கான இரு இந்திய அணிகள் செப். 16ல் தேர்வு செய்யப்பட உள்ளன. தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பதவிக்காலம் அக். 4ல் முடிவடைகிறது. இவருக்கு ஒரு ஆண்டு பதவி நீடிப்பு அளிக்கலாம். ஆனால், பி.சி.சி.ஐ., மவுனமாக இருப்பதால், இதுவே அகார்கர் பங்கேற்கும் கடைசி கூட்டமாக இருக்கலாம்.
யார் 2வது கீப்பர்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் நடக்கும் சமயத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான 'டி-20' அணி, ஆசிய விளையாட்டில் (ஜப்பான், செப்.19-அக்.4) பங்கேற்கும். இதனால் ஒருநாள் போட்டிக்கு துணை கேப்டனாக ஷ்ரேயஸ் செயல்பட முடியாது. இவருக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு துணை கேப்டனாக 'கீப்பர்-பேட்டர்' கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம். ஆசிய விளையாட்டு அணியில் இஷான் கிஷான் இடம் பெற்றிருப்பதால், இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல் போட்டியிடுகின்றனர். பன்ட் தேர்வு செய்யப்படாத பட்சத்தில், இரானி கோப்பைக்கான 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார். ஒருவேளை இந்திய அணிக்கு பன்ட் தேர்வு செய்யப்பட்டால், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் கேப்டன் பொறுப்பு ஜுரலுக்கு வழங்கப்படும்.
பாண்ட்யா எப்படி
உடற்தகுதியில் தேறினால், வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார், பிரின்ஸ் யாதவ் தேர்வு செய்யப்படலாம். பேட்டராக ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் ருதுராஜ் இடம் பெறலாம்.
'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியில் அனுபவ சர்பராஸ் கான், இளம் வீரர்கள் சனத் சங்வான், ஆயுஷ் தொசாஜே, ரவிச்சந்திரன் ஸ்மரன் இடம் பெறலாம்.
தொடரும் காயம்
வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, மொசின் கான், உள்ளிட்டோர் காயத்தால் அவதிப்படுகின்றனர். பெங்களூரு உயர்திறன் மையத்தில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைக்கு இவர்களை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை.
