/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ராஜாதி ராஜா' ஜடேஜா மாயாஜாலம்... * இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
/
'ராஜாதி ராஜா' ஜடேஜா மாயாஜாலம்... * இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
'ராஜாதி ராஜா' ஜடேஜா மாயாஜாலம்... * இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
'ராஜாதி ராஜா' ஜடேஜா மாயாஜாலம்... * இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
ADDED : அக் 04, 2025 11:19 PM

ஆமதாபாத்: முதல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி இன்னிங்ஸ், 140 ரன் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. 'சுழல்' ஜாலம் நிகழ்த்திய துணை கேப்டன் ரவிந்திர ஜடேஜா, 4 விக்கெட் சாய்த்தார்.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் முதல் டெஸ்ட் நடந்தது. ராகுல் (100), துருவ் ஜுரெல் (125), ஜடேஜா (104*) சதம் அடிக்க, இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 448/5 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சை முந்தைய நாள் ஸ்கோரான 448/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது.
விக்கெட் சரிவு
பின் இந்திய பவுலர்கள் போட்டுத்தாக்க, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. சிராஜ் 'வேகத்தில்' நிதிஷ் குமாரின் அற்புத 'கேட்ச்சில்' டேகநரைன் சந்தர்பால் (8) அவுட்டானார். ஜடேஜா 'சுழலில்' கேம்பல் (14), பிரண்டன் கிங் (5) வெளியேறினர். குல்தீப் பந்தில் கேப்டன் ராஸ்டன் சேஸ் (1) போல்டானார். ஜடேஜா வலையில் ஷாய் ஹோப் (1) அவுட்டாக, 46/5 ரன் என தத்தளித்தது.
ஹெல்மெட் 'அடி'
சற்று தாக்குப்பிடித்த அதனாசே, 'ஹெல்மெட்' மீது பும்ரா வீசிய பவுன்சர் பந்து (32.6) பலமாக தாக்கியது. இவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டதா என பிசியோதரபிஸ்ட் பரிசோதித்தார். பிரச்னை எதுவும் இல்லாததால், புதிய 'ஹெல்மெட்' அணிந்து ஆட்டத்தை தொடர்ந்தார். வாஷிங்டன் சுந்தர் பந்தில் அதனாசே (38) நடையை கட்டினார். சிராஜ் ஓவரில் (37வது) கிரிவ்ஸ் (25), வாரிகன் (0) பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஜோஹன் லெய்ன், சீல்ஸ் விளாசினர். லெய்னை (14) அவுட்டாக்கிய ஜடேஜா தனது 4வது விக்கெட்டை பெற்றார். குல்தீப் பந்தில் சீல்ஸ் (22) சிக்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. பியர்ரி (13) அவுட்டாகாமல் இருந்தார். இரண்டரை நாளில் வென்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
'ஆல்-ரவுண்டராக' ஜொலித்த ஜடேஜா (104* ரன், 4/54 விக்., ) ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் டில்லியில் (அக். 10-14) நடக்க உள்ளது.
ஆட்டநாயகன்
சொந்த மண்ணில், டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார் ஜடேஜா (10 முறை, 50 போட்டி). அடுத்த இடத்தில் கும்ளே (9, 63 போட்டி) உள்ளார்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை டிராவிட் (11 முறை, 163 போட்டி) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா (11, 86 போட்டி). முதலிடத்தில் சச்சின் (14, 200 போட்டி) உள்ளார்.
* டெஸ்டில் 15வது முறையாக 4 விக்கெட் வீழ்த்தினார் ஜடேஜா.
* ஒரு டெஸ்டில் சதம் + 4 விக்கெட்டுகளை அதிக முறை (4) வீழ்த்தியவர் பட்டியலில் 2வது இடத்தை கேரி சோபர்ஸ் (வெ.இ.,), அஷ்வின் (இந்தியா) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா. முதலிடத்தில் இயான் போத்தம் (இங்கி., 5) உள்ளார்.
'பெஸ்ட்' சிராஜ்
ஆமதாபாத் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் (4/40, 3/31) மிரட்டிய சிராஜ், சொந்த மண்ணில் தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை ((7/71) பதிவு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக (4/100, ராஜ்கோட், 2024) அசத்தி இருந்தார்.
'மெகா' வெற்றி
வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக மூன்றாவது பெரிய வெற்றியை (இன்னிங்ஸ், 140 ரன்) இந்தியா நேற்று பதிவு செய்தது. இதற்கு முன் இன்னிங்ஸ், 141 ரன் (டொமினிா, 2023), இன்னிங்ஸ், 272 ரன்னில் (ராஜ்கோட், 2018) வென்றிருந்தது.
89.2 ஓவர்
டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்டில் குறைந்த ஓவர் பேட் செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இரு இன்னிங்சிலும் (44.1 ஓவர், 45.1 ஓவர்) சேர்த்து 89.2 ஓவர் மட்டும் தாக்குப்பிடித்தது. இதற்கு முன் ராஜ்கோட் டெஸ்டில் (2018) 98.5 ஓவர் விளையாடியது.