/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்
/
'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்
'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்
'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்
ADDED : அக் 10, 2025 10:57 PM

புதுடில்லி: டில்லி டெஸ்டில், ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 318/2 ரன் எடுத்திருந்தது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இந்திய அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், ஜோஹன் நீக்கப்பட்டு ஆண்டர்சன் பிலிப், விக்கெட் கீப்பர் டெவின் இம்லச் சேர்க்கப்பட்டனர்.
நிதான துவக்கம்
இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி நிதான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன் (17.3 ஓவர்) சேர்த்த போது, வாரிகன் சுழலை எதிர்கொள்ள கிரீசை விட்டு வேகமாக வெளியே வந்தார் ராகுல். பந்து விக்கெட் கீப்பர் டெவினுக்கு செல்ல, 'ஸ்டம்டு' ஆகி திரும்பினார் ராகுல் (38).
சுதர்சன் நம்பிக்கை
ஜெய்ஸ்வால், தமிழகத்தின் சாய் சுதர்சன் இணைந்தனர். இருவரும் ரன் வேகத்தை அதிகரிக்க, இந்தியா 30 ஓவரில் 112/1 ரன் எடுத்தது. பியர்ரே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சாய் சுதர்சன், டெஸ்டில் தனது இரண்டாவது அரைசதம் கடந்தார்.
ஜெய்ஸ்வால் சதம்
பியர்ரே பந்தில் 2 ரன் எடுத்த ஜெய்ஸ்வால் டெஸ்டில், 7வது சதம் கடந்தார். சாய் சுதர்சன் 58 ரன் எடுத்த போது கிரீவ்ஸ் பந்தில் கொடுத்த 'கேட்சை' வாரிகன் நழுவவிட்டார்.
வாய்ப்பை பயன்படுத்திய இவர் சதம் அடிப்பார் என நம்பப்பட்டது. மாறாக 87 ரன் எடுத்த போது, வாரிகன் சுழலில் 'எல்.பி.டபிள்யு.,' ஆனார். 'ரிவியு' கேட்டும் பலனில்லாமல் போக, விரக்தியுடன் திரும்பினார்.
அடுத்து ஜெய்ஸ்வால், சுப்மன் இணைந்து நிதானமாக ஆடினர். இந்திய அணி 86 ஓவரில் 300/2 ரன்களை எட்டியது. பிலிப் ஓவரில் (87) ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் (173), சுப்மன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாளில் இந்திய பேட்டர்கள் வேகமாக ரன் சேர்த்து, வெஸ்ட் இண்டீசிற்கு நெருக்கடி தரலாம்.
இரண்டாவது முறை
இந்திய மண்ணில் நடந்த டெஸ்டின் முதல் நாளில், இரண்டாவது முறையாக 150 க்கும் மேல் ரன் எடுத்தார் ஜெய்ஸ்வால் (173 ரன்). முன்னதாக 2025ல் இங்கிலாந்துக்கு எதிராக 179 ரன் (விசாகப்பட்டனம்) எடுத்தார்.
இதற்கு முன் கோலி இதுபோல இரு முறை, முதல் நாளில் 150 ரன்னுக்கும் மேல் (2016ல் 151, எதிர்-இங்கிலாந்து, விசாகப்பட்டனம், 2017ல் 156, எதிர்- இலங்கை, டில்லி) எடுத்தார்.
பிராட்மேனுக்கு அடுத்து
டெஸ்டில் 24 வயதுக்கு முன் அதிகமுறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு (8) அடுத்த இடம் பெற்றார் இந்தியாவின் ஜெய்ஸ்வால். இவர், இதுவரை 5 முறை (171, 209, 214, 161, 173) இதுபோல் ரன் எடுத்துள்ளார்.
24 வயதில்...
டெஸ்ட் அரங்கில் 24 வயதுக்குள் அதிக சதம் அடித்த வீரர்களில் நான்காவது இடத்தை கிரீம் ஸ்மித் (தெ.ஆப்.,), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), வில்லியம்சனுடன் (நியூசி.,) பகிர்ந்து கொண்டார் ஜெய்ஸ்வால். இவர்கள் தலா 7 சதம் அடித்தனர்.
முதல் மூன்று இடத்தில் பிராட்மேன் (12, ஆஸி.,), சச்சின் (11, இந்தியா), கேரிபீல்டு சோபர்ஸ் (9, வெ.இண்டீஸ்) உள்ளனர்.
* 24 வயதிற்குள் டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (7) சாதனையை சமன் செய்தார் ஜெய்வால் (7).
'நோ எக்ஸ்டிரா'
நேற்று 90 ஓவர்கள் பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், 'நோ பால்', 'லெக்-பை', 'பை' என உதிரியாக ஒரு 'எக்ஸ்டிரா' ரன் கூட விட்டுத்தரவில்லை.
இந்திய மண்ணில் நடந்த சென்னை டெஸ்டில் (2021), இங்கிலாந்து அணி ஒரு உதிரி ரன் கூட தராமல், 95.5 ஓவர் பந்து வீசியது, முதலிடத்தில் உள்ளது.