தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சென்னை அணியை வென்றது டில்லி

சென்னை அணியை வென்றது டில்லி

சென்னை அணியை வென்றது டில்லி


ADDED : ஏப் 01, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டனம்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் டில்லியிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, 'நடப்பு சாம்பியன்' சென்னை அணிகள் மோதின.

வார்னர் அபாரம்

டில்லி அணிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தீபக் சகார் வீசிய 5வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் வார்னர். முஸ்தபிஜுர் வீசிய 6வது ஓவரில் பிரித்வி ஷா 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார். ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பிய வார்னர், 32 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது முஸ்தபிஜுர் பந்தில் மதீஷா பதிரானாவின் கலக்கல் 'கேட்ச்சில்' வார்னர் (52) அவுட்டானார்.

பன்ட் அரைசதம்

பொறுப்பாக ஆடிய பிரித்வி ஷா (43), ஜடேஜா 'சுழலில்' சிக்கினார். பதிரானா 'வேகத்தில்' மார்ஷ் (18), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (0) போல்டாகினர். பதிரானா வீசிய 19வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த கேப்டன் ரிஷாப் பன்ட் (51) அரைசதம் கடந்தார். டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. அக்சர் படேல் (7), அபிஷேக் போரெல் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரகானே ஆறுதல்

கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (1), ரச்சின் ரவிந்திரா (2) ஏமாற்றினர். பின் இணைந்த அஜின்கியா ரகானே (45), டேரில் மிட்சல் (34) ஜோடி நம்பிக்கை தந்தது. முகேஷ் குமார் பந்தில் ஷிவம் துபே (18), சமீர் ரிஸ்வி (0) அவுட்டாகினர். சென்னை அணி 120 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தோனி ஏமாற்றம்

பின் இணைந்த ரவிந்திர ஜடேஜா, தோனி ஜோடி போராடியது. பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய தோனி, கலீல் அகமது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 46 ரன் தேவைப்பட்டன. முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு ரன் மட்டும் எடுத்தார். இந்த ஓவரில் 5 ரன் மட்டும் கிடைத்ததால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 41 ரன் தேவைப்பட்டன. நார்ட்ஜே வீசிய 20வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன் மட்டுமே கிடைத்தது. ஒருவேளை 19வது ஓவரில் தோனி 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் அணியை கரை சேர்த்திருக்கலாம்.

சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (37 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி), ஜடேஜா (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

300 விக்கெட் வீழ்ச்சி

சென்னையின் தோனி, 'டி-20' அரங்கில் 300 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட முதல் விக்கெட் கீப்பரானார். அடுத்த இடத்தை பாகிஸ்தானின் கம்ரான் அக்மல், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (தலா 274 விக்கெட் வீழ்ச்சி) பகிர்ந்து கொண்டுள்ளனர். நான்காவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (270) உள்ளார்.



110 முறை

அபாரமாக ஆடிய டில்லியின் வார்னர் 'டி-20' அரங்கில் அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கிறிஸ் கெய்லுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 110 முறை இப்படி ரன் சேர்த்தனர். அடுத்த இடத்தில் விராத் கோலி (101) உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us