தேவ்தத் படிக்கல் மீண்டும் சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்
தேவ்தத் படிக்கல் மீண்டும் சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்
ADDED : ஆக 23, 2026 11:58 PM

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் கைகொடுக்க, முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்டில் பங்கேற்கிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் துவங்கியது.
குல்தீப் பாதிப்பு: இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,'வைரஸ் காய்ச்சலில் இருந்து குல்தீப் மீளவில்லை. தேவைப்பட்டால் 'கன்கஷன்' மாற்று வீரராக களமிறங்குவார்,''என தெரிவிக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற கேப்டன் சுப்மன் கில், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
சுப்மன் அரைசதம்: இந்திய அணிக்கு துவக்க வீரர் ராகுல் (18) சோபிக்கவில்லை. ஒருநாள் போட்டி போல விளாசிய ஜெய்ஸ்வால், 45 ரன்னுக்கு (53 பந்து, 9x4) வெளியேறினார். தேவ்தத் படிக்கல், கேப்டன் சுப்மன் கில் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்தனர். அரைசதம் எட்டிய சுப்மன் (50), பெர்னாண்டோ 'வேகத்தில்' வீழ்ந்தார். காயம் அடைந்த ரிஷாப் பன்ட் (3), 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.
இரண்டாவது சதம்: தனது சிறப்பான 'பார்மை' தொடர்ந்த தேவ்தத் படிக்கல், பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. 0, 1 ரன்னில் தப்பிய இவர், டெஸ்டில் 2வது சதம் அடித்தார். கொழும்பில் கொளுத்திய வெயிலை சமாளித்த படிக்கல்-ரவிந்திர ஜடேஜா சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். படிக்கல், 117 ரன்னுக்கு (12X4) நுவந்தா பந்தில் போல்டானார். பெர்னாண்டோ பந்தில் ரவிந்திர ஜடேஜாவும் (43) போல்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 300/5 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் (7), சரண்ஷ் ஜெயின் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று 'டெயிலெண்டர்கள்' தாக்குப்பிடித்தால், இந்தியா வலுவான ஸ்கோரை எட்டலாம்.
இலங்கை சார்பில் அசித்தா பெர்னாண்டோ அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.
சரண்ஷ் ஜெயின் அறிமுகம்
இந்திய டெஸ்ட் அரங்கில் 320வது வீரராக 'ஸ்பின் பவுலிங் ஆல்-ரவுண்டர்' சரண்ஷ் ஜெயின் (ம.பி.,) நேற்று அறிமுகமானார். இவருக்கு இந்திய தொப்பியை ரவிந்திர ஜடேஜா வழங்கினார்.
* கடந்த 1999க்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சீனியர் வீரரானார் சரண்ஷ் (33 ஆண்டு, 145 நாள்). முன்னதாக 1998ல் ராபின் சிங், (35 ஆண்டு, 23 நாள், எதிர், ஜிம்பாப்வே, ஹராரே) அறிமுகமாகி இருந்தார்.
சரண்ஷ் கூறுகையில்,''முதலில் கடவுளுக்கு நன்றி. எனது தந்தையிடம் இந்திய அணிக்கு அறிமுகமான விபரத்தை தெரிவிக்க வேண்டும். அவரால் தான் கிரிக்கெட் விளையாட துவங்கினேன். அவருக்காக தொடர்ந்து விளையாடுவேன்,''என்றார்.
சரன்ஷ் தந்தை சுபோத் ஜெயின் கூறுகையில்,''என் மகன் இந்திய அணிக்காக விளையாடுவதை காண, வாய் பகுதி கேன்சரை எதிர்த்து போராடினேன். எனக்கு இப்போது புத்துயிர் அளித்துள்ளான். அவன் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைப்பதை காண விரும்புகிறேன்,''என்றார்.
ரிஷாப் பன்ட் காயம்
லஹிரு குமாரா, மணிக்கு 133 கி.மீ., வேகத்தில் வீசிய 'பவுன்சர்' பந்தில் (57.1வது ஓவர்) ரிஷாப் பன்ட் 'புல் ஷாட்' அடிக்க பார்த்தார். அப்போது, பந்து அவரது இடது கை மணிக்கட்டு பகுதியில் தாக்கியது. உடனடியாக 'பிசியோதெரபிஸ்ட்' ஐஸ் பேக் மூலம் ஒத்தடம் கொடுத்தார். வலி குறையாததால், களத்தை விட்டு 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில்,''ரிஷாப் நலமாக உள்ளார். இன்று பேட் செய்வார்,''என்றார். இவருக்கு பதில் கீப்பிங் பணியை துருவ் ஜுரல் மேற்கொள்ளலாம்.
சுப்மன் 3000 ரன்
டெஸ்டில் இளம் வயதில் 3,000 ரன் (43 போட்டி) எட்டிய இந்திய வீரர்கள் வரிசையில் சுப்மன் கில் (26 ஆண்டு, 349 நாள்) நான்காவது இடம் பெற்றார். முதல் மூன்று இடங்களில் சச்சின் (23 ஆண்டு, 228 நாள்), சேவக் (26 ஆண்டு, 157 நாள்), வெங்சர்க்கார் (26 ஆண்டு, 263 நாள்) உள்ளனர்.
ஜெய்ஸ்வால் மோதியது சரியா
அசிதா பெர்னாண்டோ (17வது) ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி அடித்தார். 6வது பந்தில் போல்டானார். அப்போது ஆர்ப்பரித்த பெர்னாண்டோ உடன் ஜெய்ஸ்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலங்கை கேப்டன் தனஞ்சயா டி சில்வா தலையிட்டு சமாதானம் செய்தார். அந்த சமயத்தில் தனது 'ஹெல்மெட்' படும்படி பெர்னாண்டோ தலையில் உரசினார் ஜெய்ஸ்வால். இது, ஐ.சி.சி., வீரர்கள் நடத்தை விதிமுறைப்படி தவறு. ஜெய்ஸ்வால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உடல்ரீதியாக தேவையற்ற மோதல் (லெவல்- 1 தவறு) என்றால், 1-2 தகுதி இழப்பு புள்ளி, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். லெவல்-4 தவறு என்றால், 5 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டி அல்லது வாழ்நாள் தடை கூட விதிக்கப்படலாம்.
இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில்,''அந்த தருணத்தில் இலங்கை வீரர்கள் ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனாலும் பெர்னாண்டோ உடன் அவ்வளவு நெருக்கமாக ஜெய்ஸ்வால் சென்றிருக்க கூடாது,''என்றார்.
இலங்கை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் ரியான் வான் நியகெர்க் கூறுகையில்,''இரு அணி வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டதால், ஏற்பட்ட சம்பவம். 'மேட்ச் ரெப்ரி' ஆண்டி பைகிராப்ட் உரிய நடவடிக்கை எடுப்பார்,''என்றார்.
