சதம் விளாசிய தனுஷ், துஷார் * ரஞ்சி கோப்பையில் சாதனை
சதம் விளாசிய தனுஷ், துஷார் * ரஞ்சி கோப்பையில் சாதனை
ADDED : பிப் 27, 2024 11:12 PM

மும்பை: ரஞ்சி கோப்பை வரலாற்றில் 10, 11வது வீரராக களமிறங்கி சதம் விளாசி சாதனை படைத்தனர் தனுஷ், துஷார் தேஷ்பாண்டே.
இந்தியாவில் முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. மும்பையில் நடந்த காலிறுதி போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 384/10, பரோடா 348/10 ரன் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 379/9 ரன் எடுத்திருந்தது. தனுஷ் கொடியன் (32), துஷார் தேஷ்பாண்டே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டு சதம்
நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. தனுஷ், துஷார் இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். 115வது பந்தில் தனுஷ் சதம் அடித்தார். மறுபக்கம் துஷார் 112வது பந்தில் சதம் அடித்தார். இதையடுத்து ரஞ்சி கோப்பை வரலாற்றில் 10, 11 வது பேட்டராக களமிறங்கி சதம் அடித்த வீரர்கள் என இருவரும் புதிய வரலாறு படைத்தனர். 10 வது விக்கெட்டுக்கு, 240 பந்தில், 232 ரன் சேர்த்த போது, துஷார் (123) அவுட்டானார்.
மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 569 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனுஷ் (120) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 606 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பரோடா அணி, 121/3 ரன் எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
தமிழகத்துடன் மோதல்
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மார்ச் 2-6ல் நடக்கவுள்ளன. மும்பையில் நடக்கும் போட்டியில் தமிழக அணி, மும்பையை சந்திக்கிறது. மற்றொரு போட்டியில் விதர்பா-மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன.
123
இந்திய முதல் தர கிரிக்கெட்டில் 11 வது வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் மும்பை வீரர் துஷார் (123). முன்னதாக, கோல்கட்டாவின் சரோபிந்து நாத் பானர்ஜீ 121 ரன் (1946) எடுத்ததே அதிகமாக இருந்தது.
* சர்வதேச முதல் தர கிரிக்கெட் அரங்கில் 10, 11 வது வீரராக களமிறங்கி சதம் அடித்த இரண்டாவது ஜோடி என்ற பெருமை தனுஷ், துஷாருக்கு கிடைத்தது. இதற்கு முன் 1946ல் இங்கிலாந்து மண்ணில் சர்ரே அணிக்கு எதிராக இந்தியாவின் சரோபிந்து நாத் பானர்ஜீ (121), சந்து சர்வாடே (124) சதம் அடித்து இருந்தனர்.
* ரஞ்சி தொடரில் 10 வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி வரையில் தனுஷ், துஷாருக்கு (232) இரண்டாவது இடம் கிடைத்தது. முதலிடத்தில் அஜய் சர்மா-மணிந்தர் சிங் ஜோடி (233) உள்ளது.
