தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தர்மசாலாவில் 'சுழல்' சூறாவளி... * குல்தீப், அஷ்வின் அசத்தல்

தர்மசாலாவில் 'சுழல்' சூறாவளி... * குல்தீப், அஷ்வின் அசத்தல்

தர்மசாலாவில் 'சுழல்' சூறாவளி... * குல்தீப், அஷ்வின் அசத்தல்


ADDED : மார் 07, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மசாலா: தர்மசாலா டெஸ்டில் இந்திய 'சுழலில்' சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு சுருண்டது. குல்தீப் 5, அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் தர்மசாலாவில் (இமாச்சல பிரதேசம்) நேற்று துவங்கியது.

குல்தீப் கலக்கல்

இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது, குல்தீப் பந்தை டக்கெட் (27) விளாசினார். இதை 18 மீ., துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று சுப்மன் கில் பிடித்து அசத்தினார். கிராலே இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்தார்.

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 100/1 ரன் என வலுவான நிலையில் இருந்தது. பின் இந்திய 'சுழல் 'வலையில்' சிக்கியது. முதலில் போப்பை (11) வெளியேற்றிய குல்தீப், அடுத்து கிராலேவை (79) அவுட்டாக்கினார். தனது 100வது டெஸ்டில் களமிறங்கிய பேர்ஸ்டோ வேகமாக ரன் சேர்த்தார். 18 பந்தில் 29 ரன் எடுத்த இவரையும், குல்தீப் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அஷ்வின் அபாரம்

ஜோ ரூட்டை (26), ஜடேஜா வீழ்த்தினார். மீண்டும் மிரட்டிய குல்தீப், ஸ்டோக்சை 'டக்' அவுட்டாக்கி, ஐந்தாவது விக்கெட் சாய்த்தார். பின் வந்த 'டெயிலெண்டர்களை' அஷ்வின் கவனித்துக் கொண்டார். ஹார்ட்லே (6), மார்க் உட் (0), போக்ஸ் (24), ஆண்டர்சனை (0) அவுட்டாக்கினார். ஒருகட்டத்தில் 175/3 என இருந்த இங்கிலாந்து, அடுத்து 43 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு சுருண்டது.

ஜெய்ஸ்வால் விளாசல்

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது, ஜெய்ஸ்வால் (57) அவுட்டானார். ரோகித் அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து, 83 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் (52), சுப்மன் கில் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று இந்திய அணி ரன் மழை பொழியும் பட்சத்தில், வலுவான ஸ்கோரை எட்டலாம்.

26

இங்கிலாந்து தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 26 சிக்சர் (9 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார். இதற்கு முன் சச்சின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 சிக்சர் (74 இன்னிங்ஸ்) அடித்திருந்தார்.

50

பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய குல்தீப், டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார். இவர் 1871 வது பந்தில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த வரிசையில் அக்சர் படேல் (2205), பும்ரா (2465) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

* தவிர டெஸ்டில் 50 விக்கெட்டுக்கும் மேல் சாய்த்த, உலகின் மூன்றாவது இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர்' ஆனார் குல்தீப். முதல் இரு இடத்தில் பால் ஆடம்ஸ் (134, தெ.ஆப்.,), ஜானி வார்டில் (102, இங்கிலாந்து) உள்ளனர்.

712

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார் ஜெய்ஸ்வால். இதுவரை 9 இன்னிங்சில் 712 ரன் எடுத்துள்ளார். கோலி (2016ல் 655), டிராவிட் (2002ல் 602) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

* ஒட்டுமொத்தமாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்ததில் கவாஸ்கருக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தார் ஜெய்ஸ்வால். கவாஸ்கர் 1971ல் 774, 1978-79ல் 732 ரன் என இரு முறை (வெ.இண்டீஸ்) 700 ரன்னுக்கும் மேல் எடுத்தார். கோலி (692, 2014-15, ஆஸி.,) மூன்றாவதாக உள்ளார்.

1000

நேற்று 32 ரன் எடுத்த போது, டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன் கடந்த இந்திய துவக்க வீரர் ஆனார் ஜெய்ஸ்வால் (8 போட்டி, 1028 ரன்). இவர் 16 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். அடுத்து ரோகித் (17) உள்ளார்.

* இந்த இலக்கை எட்டிய இந்திய வீரர்களில் காம்ப்ளிக்கு (14) அடுத்து இரண்டாவது இடம் பெற்றார் ஜெய்ஸ்வால். புஜாரா (18), மயங்க் அகர்வால் (19), கவாஸ்கர் (21), 3, 4, 5வதாக உள்ளனர்.

* குறைந்த போட்டியில் 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர்களில் கவாஸ்கர் (11), புஜாராவை (11) பின்தள்ளி, முதலிடம் பெற்றார். சர்வதேச அளவில் பிராட்மேனுக்கு (ஆஸி., 7 போட்டி) அடுத்து உள்ளார்.

* டெஸ்டில் அறிமுகமான குறைந்த நாளில் (239) இந்த இலக்கை எட்டிய இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால். முன்னதாக டிராவிட் (299) முதலிடத்தில் இருந்தார்.

* இளம் வயதில் 1000 ரன் எடுத்த நான்காவது இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால் (22 வயது, 70 நாள்). சச்சின் (19 வயது, 217 நாள்), கபில் தேவ் (21 வயது, 27 நாள்), ரவி சாஸ்திரி (21 வயது, 197 நாள்) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

4

இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக அரைசதம் விளாசிய பேட்டர்களில் இரண்டாவது இடத்தை ஹனிப் முகமது (பாக்., 1960-61), பிரைன் போலஸ் (இங்கிலாந்து, 1964), ஹைடனுடன் (ஆஸி., 2001), பகிர்ந்து கொண்டார் கிராலே. இவர்கள் தலா 4 அரைசதம் அடித்தனர். முதலிடத்தில் கிரஹாம் கூச் (5, இங்கிலாந்து, 1981-82) உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us