/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புதிய 'ஸ்டைலில்' வருகிறார் தோனி
/
புதிய 'ஸ்டைலில்' வருகிறார் தோனி
ADDED : பிப் 12, 2024 10:56 PM

சென்னை: ''சென்னை அணி என்றால் தோனி; தோனி என்றால் சென்னை அணி. இந்த உறவு என்றென்றும் தொடரும்,''என இர்பான் பதான் தெரிவித்தார்.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலித்தவர் தோனி. மூன்று விதமான உலக கோப்பை வென்று தந்தார். ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். வரும் மார்ச் 22ல் 17வது ஐ.பி.எல்., தொடர் துவங்கலாம். இதில் சாதிப்பதற்காக சொந்த ஊரான ராஞ்சியில்(ஜார்க்கண்ட்) பயிற்சியை துவக்கி உள்ளார்.
ரசிகர்கள் பாராட்டு
இம்முறை தோனியின் புதிய 'லுக்' ரசிகர்களை கவரும். இவரது சமீபத்திய போட்டோவை 'கூல்...கூலர் தல' என்ற வாசகத்துடன் சென்னை அணி நிர்வாகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கழுத்து வரை கூந்தலுடன், 'கூலிங் கிளாஸ்' அணிந்து ஜம்மென்று உள்ளார் தோனி. இதை சில மணி நேரத்தில் 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 29 ஆயிரம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.
'வித்தியாசமான 'ஹேர்ஸ்டைலில்' தோனி, பழைய தோனியின் நினைப்பு வருகிறது, இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார், கிரிக்கெட் வாழ்க்கையை கழுத்து வரை கூந்துலுடன் துவக்கினார். இதே போல நீண்ட கூந்துலுடன் முழுமையாக ஓய்வு பெறப் போகிறாரா, வாழ்க்கை கடிகாரத்தை திருப்பி பார்ப்பது போல் உள்ளது' என பலவிதமாக ரசிகர்கள் 'கமென்ட்' செய்துள்ளனர்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் இடது முழங்கால் காயத்துடன் விளையாடிய தோனி, சென்னை அணிக்கு கோப்பை வென்று தந்தார். தற்போது ஆறாவது முறையாக கோப்பை வென்று தர காத்திருக்கிறார். இந்த சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்பு உண்டு.
இர்பான் நம்பிக்கை
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' இர்பான் பதான் கூறுகையில்,''சமீபத்தில் 'தல' தோனியை சந்தித்தேன். தலைமுடியை கழுத்து வரை வளர்த்துள்ளார். பழைய தோனியை பார்ப்பது போல இருந்தது. 42 வயதானாலும், உடல் அளவில் 'பிட்' ஆக உள்ளார். சென்னை அணிக்காகவும், அவரது ரசிகர்களுக்காகவும் தொடர்ந்து விளையாட வேண்டுமென விரும்புகிறேன். அவர் ஒரு காலில் விளையாடினாலும் கூட பார்ப்பதற்கு தயாராக உள்ளனர்.
தற்போதைக்கு இவர், ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இல்லை. சென்னை அணி உடனான உறவு தொடரும். சென்னை அணி என்றால் தோனி; தோனி என்றால் சென்னை அணி. இவரையும் சென்னை ரசிகர்களையும் பிரிக்க முடியாது,''என்றார்.